ADDED : நவ 23, 2024 06:17 AM
பெங்களூரு : பெங்களூரின் 110 கிராமங்களில், காவிரி குடிநீர் வினியோகம் துவங்கப்பட்டும், குடிநீர் இணைப்பு பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட, 110 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கில், காவிரி ஐந்தாம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பணிகள் முடிந்து ஒரு மாதத்துக்கு காவிரி குடிநீர் வினியோகம் துவக்கப்பட்டது. முறைப்படி விண்ணப்பித்து, குடிநீர் இணைப்பு பெறும்படி குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதுவரை 1,596 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.
இலவச குடிநீர்
பல்வேறு காரணங்களால் குடிநீர் இணைப்பு பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. 110 கிராமங்களின் மக்களுக்கு, ஆழ்துளை கிணறுகளின் மூலம் இலவசமாக குடிநீர் கிடைக்கிறது.
பலரும் தனிப்பட்ட ஆழ்துளை கிணறு வைத்துள்ளனர். அந்தந்த லே -- அவுட்களில் சங்கங்கள், அமைப்புகள் சார்ந்த ஆழ்துளை கிணறு நீரை பயன்படுத்துகின்றனர்.
இவர்களுக்கு காவிரி நீர் தேவைப்படவில்லை.
ஒரு முறை காவிரி குடிநீர் இணைப்பு பெற்று, மீட்டர் பொருத்தினால் காவிரி நீர் பயன்படுத்தா விட்டாலும், மாதந்தோறும் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும். எனவே மக்கள், காவிரி குடிநீர் இணைப்பு பெற தயங்குகின்றனர்.
இம்முறை பெங்களூரில் நல்ல மழை பெய்ததால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. தற்போதைக்கு குடிநீருக்கு பிரச்னை இல்லை. கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டால், டேங்கர் நீரை பெறலாம் என்பது, மக்களின் எண்ணம்.
இதுதொடர்பாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
காவிரி குடிநீர் இணைப்பு பெற, மக்கள் முன் வரவில்லை. குடிநீர் வினியோகம் துவங்கியும், 1,596 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்து, 759 பேருக்கு குடிநீர் இணைப்பு அளிக்க ஏற்பாடு நடக்கிறது. மக்களிடம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
நெருக்கடி
குடிநீர் வாரிய அலுவலகங்களை 110 கிராமங்களிலும் திறக்க, ஊழியர்களை நியமிக்க குடிநீர் வாரியம் தயாராகிறது. ஆனால் பொதுமக்கள் குடிநீர் இணைப்பு பெற, முன்வரவில்லை. இதனால் குடிநீர் வாரியத்துக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது.
காவிரி குடிநீர் இணைப்பு பெறும்படி, 110 கிராமங்களின் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 4 லட்சம் இணைப்புகள் அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
டிசம்பருக்குள் ஒரு லட்சம் இணைப்புகள் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.