‛‛என்னை எம்.பி.,யாக்க விரும்பும் அமேதி மக்கள்'': பிரியங்கா கணவருக்கும் அரசியல் ஆசை
‛‛என்னை எம்.பி.,யாக்க விரும்பும் அமேதி மக்கள்'': பிரியங்கா கணவருக்கும் அரசியல் ஆசை
ADDED : ஏப் 04, 2024 06:06 PM

புதுடில்லி: நான் எம்.பி., ஆக விரும்பினால், அமேதியில் இருந்து தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ரா கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்து வரும் காங்கிரஸ் கட்சி,உ.பி.,யின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் தோல்வியடைந்தார். இந்த முறை ராகுல் மீண்டும் அமேதியில் போட்டியிட வேண்டும் என காங்கிரசார் வலியுறுத்துகின்றனர். ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடுவார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா கூறியதாவது: ‛‛ நான் எம்.பி., ஆக விரும்பினால், அமேதியில் இருந்து தான் வெற்றி பெற வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். பல ஆண்டுகளாக ரேபரேலி, அமேதி மற்றும் சுல்தான்பூர் பகுதிக்கு நேரு குடும்பத்தினர் பல பணிகளை செய்துள்ளனர். தற்போதைய அமேதி எம்.பி.,யால் அமேதி மக்கள் இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். அவரை தேர்வு செய்து தவறு செய்துவிட்டதாக வருந்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

