"பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் என்றும் நன்றியுள்ளவர்கள்: கவர்னர் ரவி
"பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் என்றும் நன்றியுள்ளவர்கள்: கவர்னர் ரவி
ADDED : மே 28, 2024 10:18 AM

சென்னை: 'பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்' என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புனித செங்கோலை மீட்டெடுத்து இந்திய பார்லிமென்டில் நிறுவியதன் முதலாம் ஆண்டு நிறைவை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது.
நமது சுதந்திரத்துக்கு வழிவகுத்த அதிகாரப் பரிமாற்றத்தின் வெளிப்படையான கருவியாக விளங்கிய செங்கோலின் புண்ணிய பூமியும் அதன் பிறப்பிடமுமான தமிழகத்தின் சகோதர, சகோதரிகளுக்கும் இது பெருமைக்குரிய நாள்.
தமிழர் பெருமையின் இந்த அடையாளத்தை வேண்டுமென்றே நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்வதிலிருந்து மீட்டு, அதை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.