ADDED : மார் 21, 2025 04:08 AM

பெங்களூரு : கர்நாடக அரசு 1 யூனிட் மின்சாரத்திற்கு 36 பைசா உயர்த்தி நேற்று உத்தரவிட்டது. இதற்கு முன்பு 20 முதல் 25 பைசா வரை மட்டுமே உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 36 பைசா உயர்த்தப்பட்டு இருப்பது, மக்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளனர்.
* மக்கள் பாதிப்பு
வீடுகளில் நிச்சயமாக 200 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்த முடியாது. கடந்த மாதம் எங்கள் வீட்டில் 700 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினோம். மின் கட்டணம் 6,000 ரூபாய் வந்தது. தற்போது யூனிட்டிற்கு 36 பைசா உயர்த்தி உள்ளனர். அடுத்த முறை எவ்வளவு கட்டணம் வரும் என்று தெரியவில்லை. கட்டண உயர்வு நடுத்தர மக்களை பாதிக்கும்.
- ரோஷினி, ராமசந்திரபுரம், பெங்களூரு.
========
தொழில் பாதிப்பு
வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்ற, மக்களின் அடிமடியில் கை வைக்க வேண்டுமா. இன்றைய நவீன காலகட்டத்தில் மின்சாரம் இன்றி எதுவுமே செய்ய முடியாது. மின்கட்டண உயர்வு சிறு, குறு தொழில்களை கடுமையாக பாதிக்கும். அத்தியாவசிய பொருட்கள் கட்டணத்தை உயர்த்தும் போதும், மக்களை ஒரு முறை அரசு நினைத்து பார்க்க வேண்டும்.
- பி.கஜேந்திரன், அச்சக உரிமையாளர், ராபர்ட்சன்பேட்டை.
========
பயமாக உள்ளது
அத்தியாவசிய பொருட்கள் விலையை ஒவ்வொன்றாக உயர்த்தி, மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது அரசு. அடுத்ததாக என்ன உயர்த்துவரோ என்ற பயம் ஏற்பட்டு உள்ளது. ஒரு பக்கம் அள்ளி கொடுப்பது போன்று கொடுத்து விட்டு, இன்னொரு பக்கமாக பறிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட கூடாது. தொழில்கள் பாதிக்கப்படும்.
- வி.மார்கரேட், சிறுதானிய பாலிஷிங் வர்த்தகம், தொழிற்பேட்டை, பங்கார்பேட்டை.
=======
என்ன நியாயம்?
விலைவாசி உயர்வு மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அத்தியாவசிய பொருட்கள் விலையை அதிகரித்து கொண்டே சென்றால் எப்படி. தேர்தலின் போது விலையை குறைக்கிறோம் என்று சொன்னார்கள். அதன்படி நடந்து கொள்ளவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு; வந்த பின்பு ஒரு பேச்சு பேசுவது எந்த வகையில் நியாயம்.
- ஆர்.புருஷோத்தமன், ஓய்வுபெற்ற வங்கி காசாளர், காவல் பைர சந்திரா, பெங்களூரு.
=========
திட்டம் தோல்வி
ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதற்கு பதிலாக, அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்தி அரசு தொந்தரவு கொடுக்கிறது. இவர்கள் இஷ்டத்திற்கு கட்டணத்தை உயர்த்துவது சரியல்ல. காங்கிரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களும் தோல்வி அடைந்து உள்ளது. இவர்களிடம் யாரும் இலவசம் வேண்டும் என்று கேட்கவில்லையே. இதை புரிந்து கொள்ள வேண்டும்.
- திவ்யா, சமூக ஆர்வலர், பசவனகுடி, பெங்களூரு.
========
அடுத்து என்ன?
இப்போது கோடை காலம் என்பதால், அனைவரின் வீடுகளிலும் 'பேன்' நிச்சயம் ஓடும். நேரம் பார்த்து மின் கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. இலவசம் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர். பால், பஸ், மெட்ரோ கட்டணத்தை உயர்த்தினர். இன்னும் என்னென்ன உயர்த்த உள்ளனரோ. அடுத்து என்ன என்று நினைத்தாலே பயமாக உள்ளது.
-பரத் கவுடா, தனியார் ஊழியர், சர்ஜாபூர்.