தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/எரிவாயு சப்ளை செய்யும் நாடுகளுடன் பேச்சு மூலம் தீர்வு 'மக்கள் நலனே முக்கியம்!' : ஜெய்சங்கர் விளக்கம்

எரிவாயு சப்ளை செய்யும் நாடுகளுடன் பேச்சு மூலம் தீர்வு 'மக்கள் நலனே முக்கியம்!' : ஜெய்சங்கர் விளக்கம்

எரிவாயு சப்ளை செய்யும் நாடுகளுடன் பேச்சு மூலம் தீர்வு 'மக்கள் நலனே முக்கியம்!' : ஜெய்சங்கர் விளக்கம்


UPDATED : மார் 10, 2026 12:08 AM

ADDED : மார் 09, 2026 11:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2026 12:08 AM ADDED : மார் 09, 2026 11:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால் எண்ணெய் வினியோக தொடர் பாதிக்கப்பட்டு உள்ளது. எனினும், நாட்டு மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக, பல்வேறு தரப்பினரிடமும் பேச்சு நடத்தி நிலைமையை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். போர் நிலவரங்களை பிரதமர் நரேந்திர மோடி உன்னிப்பாக கவனித்து வருகிறார்,'' என, விலை உயர்வு தொடர்பாக பார்லி.,யில் அறிக்கை தாக்கல் செய்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

போர் பதற்றம் நீடிக்கிறது.




மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதிலடி கொடுப்பதால் மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

இதனால், நம் நாடு உட்பட உலகளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

இந்நிலையில், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று துவங்கியது.

காலையில் ராஜ்யசபா கூடியதும், மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவும் சூழலில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து, விதி எண் 267ன் கீழ் விவாதம் நடத்த வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.

இவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படவே, கடும் அமளிக்கு மத்தியில், ஈரான் போர் குறித்து அறிக்கை தாக்கல் செய்து, பா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் பேசியதாவது:

ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர், மேற்காசிய நாடுகளை மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பல நாடுகளையும் பாதித்துள்ளது; ஏராளமான உயிரிழப்புகளை இந்த போர் ஏற்படுத்தி உள்ளது.

பதற்றங்களை தணிக்க, பேச்சு



ஈரானில் உச்ச தலைவராக இருந்த கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இது, கவலைக்குரியது.

நம் நாட்டை பொறுத்தவரை, மேற்காசிய பிராந்தியத்தில் போர் ஏற்பட்ட உடனேயே, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த மோதல் குறித்து கவலை தெரிவித்து மத்திய அரசு அறிக்கையும் வெளியிட்டது. அமைதியை பேணும்படி இரு தரப்பிடமும் வலியுறுத்தப்பட்டது. பதற்றங்களை தணிக்க, பேச்சு மற்றும் துாதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

இந்த விவகாரத்தை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருகிறார். உரிய நேரங்களில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அவர் உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார்.

ஈரான் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு, அங்குள்ள துாதரகங்கள் மூலம் தொடர்ச்சியாக அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. நேற்று வரை, 67,000 இந்தியர்களை பத்திரமாக தாயகத்துக்கு அழைத்து வந்துள்ளோம்.

இந்த போரில், நம் நாட்டைச் சேர்ந்த வணிக கப்பல் மாலுமிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்; ஒருவர் மாயமாகி உள்ளார்.

நாட்டின் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. மேற்காசிய நாடுகள், நம் எரிசக்தி பாதுகாப்புக்கு முக்கிய பங்காற்றுகின்றன.

நமக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வினியோகிக்கும் முக்கிய நிறுவனங்கள் அங்குள்ளன. தற்போதைய போரால், நம் நாட்டிற்கான எண்ணெய் வினியோகத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசை பொறுத்தவரை, நாட்டு மக்களின் நலன் தான் முதன்மையான விஷயம். அதற்காக, பல்வேறு தரப்பினரிடமும் பேச்சு நடத்தி, நிலைமையை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

டெஹ்ரானில் உள்ள பல இந்திய மாணவர்கள், நம் துாதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வணிக நடவடிக்கைகளுக்காக ஈரான் சென்ற இந்தியர்கள், ஆர்மீனியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெஹ்ரானில் உள்ள நம் துாதரகம், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. இந்தியர்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அக்கறை இல்லை! எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லை. அவர்கள் சபையில் அராஜகத்தையும், கூச்சலையும் மட்டுமே உருவாக்க விரும்புகின்றனர். பல்வேறு விவாதங்களில் அமைச்சர்கள் பதிலளிக்கும் சமயத்தில், எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வெளிநடப்பு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். நட்டா மத்திய சுகாதார அமைச்சர், பா.ஜ.,


தோற்றுப்போன ராகுல்! எதிர்க்கட்சிகள் கேட்டதாலேயே லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்திற்கு அரசு தயாரானது. அதற்குள் இன்னொரு நோட்டீசை அளித்து, அதன் மீது விவாதம் நடத்தும்படி கேட்பது எப்படி நியாயம்? ராகுல் ஒரு தோல்வி அடைந்த எதிர்க்கட்சித் தலைவர். பீயூஷ் கோயல் மத்திய வர்த்தக அமைச்சர், பா.ஜ.,


விவாதம் நடக்காமலேயே லோக்சபா ஒத்திவைப்பு பிற்பகல் 3:00 மணிக்கு லோக்சபா மீண்டும் கூடியதும், பெரும் ரகளை வெடித்தது. மேற்காசிய பதற்றம் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கின. அப்போது, சபையை வழிநடத்திய ஜகதாம்பிகா பால், ''சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்துக்கு அரசு தயாராக உள்ளது. ஆனாலும், அதை நடக்கவிடாமல் செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு வேறு ஏதோ திட்டம் உள்ளது. விவாதத்தை துவங்குவதற்குரிய நபரை அழைத்தால், அவர் தடுக்கப்பட்டு வேறு நபர் பேச முயற்சிக்கிறார். ''புதிய பிரச்னை குறித்து விவாதம் நடத்த வேண்டுமெனில், அதற்கென நடைமுறை உள்ளது. அலுவல் ஆய்வுக்குழுவில் ஆலோசித்து சபாநாயகரின் ஒப்புதல் கிடைத்தாக வேண்டும். இது தெரியாமல், சபையின் விதிகளுக்கு மாறாக நடக்கிறீர்கள். குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்துவதன் மூலம், சபையின் மாண்பு கெடுகிறது,'' என்றார். அப்போதும் அமளி அதிகமாகல வேறு வழியின்றி லோக்சபா அலுவல்கள் முழுதுமாக ஒத்தி வைக்கப்பட்டன. இதனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் நடக்கவில்லை. விவாதம் நடந்து ஓட்டெடுப்பு நடந்தால், அது தோற்கடிக்கப்படுவது உறுதி. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு லோக்சபாவில் பெரும்பான்மை இருக்கிறது. இது தெரிந்தும், அரசியல் காரணங்களுக்காகவே சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.



லோக்சபாவில் அமளி ஒத்திவைப்புக்கு பின், மதியம் 12:00 மணிக்கு லோக்சபா கூடியதும், இதே அறிக்கையை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தாக்கல் செய்து பேசினார். எனினும், 'இந்த விவகாரத்தில் நிறைய விஷயங்களை மத்திய அரசு மறைக்கிறது. அமைச்சர் ஜெய்சங்கரின் விளக்கத்தை ஏற்க முடியாது. இது குறித்து முழு விவாதம் நடத்த வேண்டும்' என வலியுறுத்தி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் இறங்கினர். அப்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், ''எதிர்க்கட்சிகள் கடும் குழப்பத்தில் உள்ளன. முதலில் சபாநாயகருக்கு எதிராக நோட்டீஸ் அளித்தன. அது நிலுவையில் உள்ளது. அது குறித்து விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கும் நிலையில், தற்போது இன்னொரு நோட்டீசை அளித்து, சபையை ஒத்தி வைக்க கோருகின்றனர். குறைந்தபட்ச அடிப்படை பொறுப்புணர்வு கூட இல்லாமல் எதிர்க்கட்சிகள் நடந்து கொள்கின்றன. என் வாழ்நாளில், இது போன்ற பொறுப்பில்லாத எதிர்க்கட்சிகளை பார்த்ததே இல்லை,'' என்றார். எனினும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் ரகளை செய்யவே, லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. அரசு தரப்பு தாமாகவே முன்வந்து, ஒரு பிரச்னை குறித்து அறிக்கை தாக்கல் செய்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபா என, இரு சபைகளிலும் விளக்கம் அளித்து பேசி விட்டது என்றால், அதே பிரச்னை குறித்து, மீண்டும் ஒரு முறை சபைகளில் விவாதம் நடத்தப்படுவது வழக்கமல்ல. எனவே, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் மேற்காசிய போர் குறித்த விவாதம், இனி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. இந்த சூழ்நிலையை அரசு தரப்பும், எதிர்க்கட்சிகளும் எப்படி கையாளப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.



'எரிகிறது வளைகுடா; நிர்கதியில் இந்தியர்கள்' 'மேற்காசிய போர் சூழல் குறித்து விவாதம் தேவை. ஆனால், மத்திய அரசு தயாராக இல்லை. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் விளக்கத்தை ஏற்க முடியாது' என கூறி, பார்லி.,யில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்; பின்னர், பார்லி., நுழைவாயிலான மகர் துவார் பகுதியில் கூடி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 'எரிகிறது வளைகுடா; அதிர்ச்சியில் எண்ணெய் வளம்; நிர்கதியாக நிற்கும் இந்தியர்கள். இந்தியாவுக்கு தற்போதைய தேவை தலைமையே தவிர, மவுனம் இல்லை' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை துாக்கி பிடித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.



- நமது டில்லி நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us