நிலநடுக்கத்தால் பெரியாறு அணை சேதம் : கேரள அதிகாரிகளின் அடுத்தகட்ட நாடகம்
நிலநடுக்கத்தால் பெரியாறு அணை சேதம் : கேரள அதிகாரிகளின் அடுத்தகட்ட நாடகம்
ADDED : ஜூலை 30, 2011 04:20 AM

கூடலூர் : 'நிலநடுக்கத்தால், பெரியாறு அணை சேதமடைந்துள்ளது' என, கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், புகார் கூறியதுடன், தடையை மீறி, கேரள நிருபர்களை, அணைப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
இடுக்கி அணை அருகே, கடந்த சில நாட்களுக்கு முன், நிலநடுக்கம் ஏற்பட்டது. இடுக்கி அணைக்கும், பெரியாறு அணைக்கும் இடையே, 60 கி.மீ., தூரம் உள்ளது. இருந்த போதிலும், இடுக்கி அணை அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பெரியாறு அணையில், சேதம் ஏற்பட்டுள்ளது என்ற புகாரை, கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், கூறத் துவங்கியுள்ளனர்.
பாதிப்பு? கேரள நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஜார்ஜ் டேனியல் தலைமையில், அதிகாரிகள் குழு, தடையை மீறி, கேரள நிருபர்களை அணைப்பகுதிக்கு, ஜீப்பில் அழைத்துச் சென்றனர். அணையின் மேல்பகுதியில், சாதாரணமாக சிமென்ட் உதிர்ந்துள்ள இடத்தை, 'குளோசப்பில்' படம் எடுத்து, நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக, செய்தியை வெளியிடச் செய்துள்ளனர்.
திசை திருப்ப முயற்சி: சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின்படி, ஐவர் குழுவினரால், அணைப் பகுதியில் ஆய்வுப் பணிகள் நடக்கின்றன. மாதிரி எடுப்பதற்காக, 3 இடங்களில் அடையாளம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், பிரச்னையை திசை திருப்பும் முயற்சியில், கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி, அணைப் பகுதிக்கு கேரள நிருபர்களை அழைத்து வந்தது குறித்து, அணையிலிருந்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.