குற்ற பின்னணி இருந்தால் தேர்தலில் நிற்க நிரந்தர தடை?
குற்ற பின்னணி இருந்தால் தேர்தலில் நிற்க நிரந்தர தடை?
UPDATED : பிப் 11, 2025 03:33 AM
ADDED : பிப் 11, 2025 03:29 AM

புதுடில்லி : கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட நிரந்தரமாக தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த மனுவில், 'எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1951ன் படி, அவர்கள் ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை உள்ளது. ஆனால், இந்த சட்டத்தை மாற்றி வாழ்நாள் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், 'இது, அரசியல் சாசன பிரிவு சார்ந்த விவகாரம் என்பதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும். அடுத்த மூன்று வாரத்தில் மத்திய அரசு மற்றும் தலைமை தேர்தல் கமிஷன் இந்த மனு மீது விரிவான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.