புகையிலைக்கு எதிராக தனிநபர் விழிப்புணர்வு; இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்
புகையிலைக்கு எதிராக தனிநபர் விழிப்புணர்வு; இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்
ADDED : மே 30, 2025 11:24 PM

பாலக்காடு : பாலக்காடு மாவட்டத்தில், புகையிலைக்கு எதிராக தனிநபர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதை, தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பரக்குன்னம் பகுதியை சேர்ந்தவர் சையது, 55. ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர், மளிகை கடை நடத்தி வந்தார். தற்போது, நாளிதழ் ஏஜன்ட்டாக இருக்கும் இவர், புகையிலைக்கு எதிராக தனிநபராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த, 30 ஆண்டுகளாக இந்த சமூக பணியை மேற்கொண்டு வருகிறார். உலக புகையிலை எதிர்ப்பு தினமான, மே 31, இவரது பிறந்தநாள் என்பது கூடுதல் தகவல். நாளிதழ்கள் வினியோகிக்கும் ஏஜன்ட் என்பதால், தினமும் 30 கி.மீ.,க்கு மேல் பயணிக்கிறார். அப்போது, ரோடு சந்திப்புகளிலும், வழியோரங்களிலும் மது அருந்துபவர்கள் மற்றும் புகைபிடிப்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். இவரது செயலை, பல்வேறு தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.
சையது கூறியதாவது:
மளிகை நடத்திய போது, புகையிலை பொருட்களை விற்பனை செய்தேன். அது உடலுக்கு தீங்கானது என்பதை உணர்ந்ததும், அவற்றை விற்பனை செய்வதை நிறுத்தினேன். தற்போது, நாளிதழ்கள் வினியோகிக்கிறேன்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் என, அனைத்து தரப்பினர் இடையேயும், புகையிலை, மது பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். இவற்றுக்கு எதிராக எனது பணி எப்போதும் தொடரும்.
பள்ளி விடுமுறை நாட்களில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பும் நடத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.