குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை தனிநபர் சட்டங்கள் மீற முடியாது சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை தனிநபர் சட்டங்கள் மீற முடியாது சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
ADDED : அக் 19, 2024 12:24 AM
புதுடில்லி: 'நம் நாட்டின் தனிநபர் சட்டங்கள், விரும்பிய நபருடன் வாழும் உரிமையை அளித்தாலும், குழந்தை திருமணங்களை தடுக்கும் சட்டத்தை இவை மீற முடியாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நம் நாட்டில் நடக்கும் குழந்தை திருமணங்களை தடுக்கும் நோக்கில், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை மத்திய அரசு 2006ல் இயற்றியது.
தற்போதுள்ள சட்டப்படி, பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை தீவிரமாக நடைமுறைபடுத்தக்கோரி, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நேற்று அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நம் நாட்டில் உள்ள தனிநபர் சட்டங்கள், விருப்பம் உள்ள துணையுடன் ஒருவர் இணைந்து வாழும் உரிமையை அளிக்கிறது. ஆனால், இந்த சட்டங்கள் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை மீற முடியாது.
ஒருவர் தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை, குழந்தை திருமணங்கள் மீறுகின்றன. குழந்தை திருமணங்களை தடுப்பதிலும், சிறார்களை பாதுகாப்பதிலும் மட்டுமே அதிகாரிகள் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதிலும் கவனம் தேவை. ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள நிலைமையை பொறுத்து, குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான உத்திகளை கையாள வேண்டும்.
பல துறைகள் இடையே ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் இருந்தால் மட்டுமே குழந்தை திருமணங்களை தடுக்க முடியும். இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
சமூக நிலைமைகள் சார்ந்து அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். குழந்தை திருமண தடை சட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை களைய நடவடிக்கை தேவை.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.