பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனு: தள்ளுபடி செய்தது டில்லி உயர்நீதிமன்றம்
பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனு: தள்ளுபடி செய்தது டில்லி உயர்நீதிமன்றம்
ADDED : மே 13, 2024 04:13 PM

புதுடில்லி: பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசும் பிரதமர் மோடி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த ஏப்.,21ல் ராஜஸ்தானில் நடந்த பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, ''ஹிந்துக்களின் வளங்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களுக்கு காங்கிரஸ் வழங்கும். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க உள்ளது'' எனப் பேசியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தரப்பில் இந்திய தேர்தல் கமிஷனில் புகாரளிக்கப்பட்டது. ஆனாலும், புகார் குறித்து எந்த நடவடிக்கையும் தேர்தல் கமிஷன் இதுவரை எடுக்கவில்லை. எனவே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பிரதமர் மோடி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று (மே 13) விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''இந்த விவகாரத்தில் பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அக்கட்சி தரப்பில் பதிலளிக்கப்பட்ட உடன் நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், ''மனுதாரரின் புகாரை சட்டத்தின்படி சுயாதீனமாக மதிப்பிட தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது'' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.