தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி
தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி
ADDED : மே 09, 2025 10:13 PM
தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை கட்டாயம் அமல்படுத்தக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றத்தில், பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'மும்மொழி கொள்கை உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் உடைய புதிய கல்வி கொள்கையை, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இன்னும் அமல்படுத்தாமல் உள்ளன.
'எனவே, புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என்று, தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் இடம் பெற்ற அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை படித்து பார்த்த நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
தேசிய கல்வி கொள்கையை, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கின்றனவா, இல்லையா என்பது ஒரு சிக்கலான பிரச்னை. எனவே, இதில் நேரடியாக எந்த ஒரு மாநிலத்திற்கும் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்க முடியாது. ஒரு கொள்கையை செயல்படுத்துவதன் வாயிலாக அல்லது செயல்படுத்தாமல் இருப்பதன் வாயிலாக, குடிமக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது என்றால், அதில் நீதிமன்றம் தலையிட முடியும்.
இந்த குறிப்பிட்ட மனுவில், நாங்கள் அத்தகைய நடவடிக்கையை எடுக்க விரும்பவில்லை. மனு தாக்கல் செய்துள்ளவர் டில்லியில் வசிக்கக் கூடியவராக இருக்கிறார். எனவே, தமிழகத்தில் இந்த கொள்கையை அமல்படுத்தக் கோரி, அவர் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு உகந்ததாக நாங்கள் பார்க்கவில்லை; மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -