அனில் அம்பானியின் வங்கி மோசடி புகார் மீது நீதி விசாரணை கேட்டு மனு
அனில் அம்பானியின் வங்கி மோசடி புகார் மீது நீதி விசாரணை கேட்டு மனு
ADDED : நவ 19, 2025 04:32 AM

'ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்' நிறுவனர் அனில் அம்பானியின் வங்கி மோசடி குறித்து, நீதி விசாரணை கேட்டு தாக்கல் செய்யப் பட்ட மனு மீது பதில் அளிக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது.
ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பொதுநல மனு விசாரணையில், அனில் அம்பானி, 17,000 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக இரண்டு வழக்கு களை சி.பி.ஐ., பதிவு செய்தது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் முன்னாள் செயலரான இ.ஏ.எஸ்., ஷர்மா என்பவர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:
அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்' தொடர்புடைய வங்கி மோசடி என்பது, இந்தியாவில் நடந்த கார்ப்பரேட் முறைகேடுகளில் மிகப்பெரியதாக இருக்கிறது.
இந்த விசாரணையில் எஸ்.பி.ஐ., உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளும் உடந்தையாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
எனவே, இது குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மிகப்பெரிய மோசடி மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முன் வைத்த வாதம்:
இந்த வழக்கு, இந்திய வரலாற்றில் மிகப்பெரிய பெருநிறுவன மோசடியாக பார்க்கப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக, 2025ம் ஆண்டில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி புகாரில், வங்கிகளின் கூட்டுச் சதி குறித்து முறையாக விசாரிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.
எனவே, இந்த வழக்கில் வங்கிகள் மற்றும் அவற்றின் அதிகாரிகளுக்கு எதிரான விசாரணை நிலை அறிக்கைகளை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
சிறப்பு புலனாய்வு குழு இதுதவிர, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி குறித்து முழுமையான, பாரபட்சமற்ற மற்றும் காலவரையறையுடன் கூடிய விசாரணையை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை நடத்த உத்தரவிட வேண்டும்.
இதற்காக, இரு அமைப்பினர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.
அவரது வாதத்தை பதிவுசெய்து கொண்ட தலைமை நீதிபதி, “இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் அனில் அம்பானி தரப்பு, மூன்று வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்,” என, நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -:

