ADDED : டிச 07, 2024 09:33 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச மக்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க, ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்கா பகுதியைச் சேர்ந்த மதகுருக்கள் மற்றும் குடியிருப்போர் சங்க பிரதிநிதிகள் துணைநிலை கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கவர்னர் சக்சேனாவிடம், மதகுருக்கள் மற்றும் சங்க பிரதிநிதிகள் அளித்துள்ள மனு: நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் மிகுந்த கவலையை அளிக்கிறது.
டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேச மக்களை கண்டுபிடித்து திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கு அவர்களுக்கு வாடகை தங்குமிடமோ, வருமானம் ஈட்ட வேலையோ வழங்கக் கூடாது. அரசு நிலம், நடைபாதை, பூங்கா மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமித்து தங்கியியுள்ள வங்கதேச அகதிகளை, அப்புறப்படுத்த டில்லி மாநகர போலீஸ் மற்றும் மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.
ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கி இருந்தால் அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
வங்கதேசத்தினரை கண்டறிந்து உடனடியாக திருப்பி அனுப்ப சிறப்பு இயக்கம் துவக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.