ADDED : ஜன 10, 2025 11:21 PM

மங்களூரு: பெட்ரோல் நிலையத்தில் கம்பெனி கியூ.ஆர்., குறியீடுக்கு பதிலாக, தன் குறியீட்டை ஒட்டி 58 லட்சம் ரூபாய் மோசடி செய்த பங்க் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு பங்ராகுளூர் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு பாஜ்பே பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ், 36, கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். சரியான நேரத்திற்கு பணிக்கு வருவது மட்டுமின்றி வேலையையும் சரியாக செய்து வந்துள்ளார்.
நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றார். எனவே வரவு - செலவை நிர்வகிக்கும் பொருட்டு, மேலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
பதவி உயர்வு கிடைத்த பின், பணத்தை பார்த்தபோது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் விபரீத ஆசை ஏற்பட்டது. யாருக்கும் சந்தேகம் வராத வகையில், பணத்தை திருடுவதற்கு ஒரு வழியை கண்டுபிடித்தார்.
ஒரு நாளைக்கு பெட்ரோல் நிலையத்திற்கு வரும் நுாற்றுக்கணக்கானோர் கியூ.ஆர்., குறியீடு மூலமே பணம் செலுத்துகின்றனர்.
இதை கவனித்த அவர், கம்பெனியின் கியூ.ஆர்., குறியீடுகள் இருந்த இடத்தில், தன் வங்கிக்கணக்கின் கியூ.ஆர்., குறியீடுகளை 2020 மார்ச் 10ம் தேதி ஒட்டி உள்ளார்.
பல லட்சம்
இதன் மூலம், பெட்ரோல், டீசல் நிரப்பியோர் குறியீடுகளில் பணம் செலுத்தும்போது, கம்பெனியின் வங்கிக் கணக்கிற்கு பணம் வராமல், மோகன்தாசின் வங்கிக் கணக்கிற்கு பணம் சென்றுள்ளது. இப்படியே பல ஆண்டுகள் தொடர்ந்தது. இப்படி செய்து பல லட்சம் ரூபாயை சம்பாதித்து உள்ளார்.
ஜாலி
ஒருகட்டத்தில் சந்தேகம் வரக்கூடாது எனக்கருதி கியூ.ஆர்., குறியீடுகளை 2022 ஜூலை 31ம் தேதி மாற்றி உள்ளார். குறுக்குவழியில் சம்பாதித்த பணத்தை செலவு செய்து ஜாலியாக வாழ்ந்து உள்ளார்.
பல நாள் திருடன், ஒரு நாள் அகப்படுவான் என்பது போல, பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்யும் சக ஊழியர்கள், இவரது நடவடிக்கை பற்றி, ரிலையன்ஸ் நிலையத்தின் உயர் அதிகாரி சந்தோஷ் மேத்யூவுக்கு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர், மங்களூரு சைபர் போலீசில் புகார் செய்து உள்ளார். விசாரணையில், மோகன்தாஸ் கியூ.ஆர்., குறியீட்டின் மூலம் 58 லட்சம் ரூபாய் பணம் சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.

