திரிபுராவில் பெட்ரோலுக்கு ரேஷன்!: தட்டுப்பாடு காரணமாக திடீர் முடிவு
திரிபுராவில் பெட்ரோலுக்கு ரேஷன்!: தட்டுப்பாடு காரணமாக திடீர் முடிவு
ADDED : நவ 10, 2024 12:25 AM

அகர்தலா: வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இன்று முதல் ரேஷன் முறையில் பெட்ரோல் வினியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, 'இருசக்கர வாகனங்களுக்கு 200 ரூபாய்க்கும், மூன்று சக்கர வாகனங்களுக்கு 400 ரூபாய்க்கும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 1,000 ரூபாய்க்கு மட்டுமே, நாள் ஒன்றுக்கு பெட்ரோல் வினியோகிக்கப்படும்' என, மாநில அரசு அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள, லும்டிங் - பதார்புர் இடையிலான ரயில் வழித்தடத்தில் கடந்த மாதம் 31ம் தேதி எரிபொருள் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால், 5 கி.மீ., தொலைவுக்கு ரயில் பாதை சேதம் அடைந்துள்ளது.
அதை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. திரிபுரா மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் ரயில் வாயிலாகவே இம்மாநிலத்தை வந்தடைகின்றன.
கட்டுப்பாடு
சரக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டால், அத்தியாவசிய பொருட்களின் வரத்து தடைபடும் நிலை உள்ளது.
தற்போது, லும்டிங் - பதார்புர் இடையே சரக்கு ரயில் சேவை முற்றிலுமாக தடம் புரண்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் வந்து சேருவது தடைபட்டுள்ளது.
திரிபுராவுக்கான எரிபொருள், 10 நாட்களாக வந்து சேர முடியவில்லை. இந்த நேரத்தில், மாநிலத்தின் பெட்ரோல் கையிருப்பும் குறைவாக உள்ளது.
ரயில்வே பாதையை சீரமைக்கும் பணி எப்போது முடிவடையும் என்பதிலும் உறுதியான தகவல் இல்லாததால் நிலைமையை சமாளிக்க மாநில அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இதன்படி தினசரி பெட்ரோல் வினியோகத்தில் ரேஷன் முறையை அரசு அறிவித்துள்ளது.
மாநில உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி நேற்று கூறியதாவது:
மாநிலத்தின் பெட்ரோல் தேவையை சமாளிக்க இன்று முதல் ரேஷன் முறை அமலுக்கு வருகிறது. அந்த வகையில், இருசக்கர வாகனங்களுக்கு 200 ரூபாய்க்கும், மூன்று சக்கர வாகனங்களுக்கு 400 ரூபாய்க்கும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 1,000 ரூபாய்க்கு மட்டுமே நாள் ஒன்றுக்கு பெட்ரோல் வினியோகிக்கப்படும்.
பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நிலைமையை சமாளிக்க இந்த தற்காலிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒத்துழைப்பு
மக்கள் பொறுப்புணர்வுடன் பெட்ரோலை பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகனங்களை பயன்படுத்தும்படி அறிவுறுத்துகிறோம்.
ரயில் பாதை சீரமைக்கப்பட்டதும், பெட்ரோல் வினியோகம் சீரடையும். அதுவரை மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வடகிழக்கு ரயில்வேயின் தலைமை செய்தி தொடர்பாளர் கே.கே.சர்மா கூறுகையில், ''லும்டிங் - பதார்புர் இடையே சரக்கு ரயில் சேவை மட்டுமே தடைபட்டுள்ளது. பயணியர் ரயில் சேவை வழக்கம் போல் செயல்படுகிறது,'' என்றார்.