UPDATED : மே 24, 2026 08:40 AM
ADDED : மே 24, 2026 04:33 AM

புதுடில்லி: ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் போர் காரணமாக, உலகம் முழுதும் பெட்ரோலிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு கொண்டு வரும் கப்பல்கள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், 'நாட்டின் பொதுத் துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்' என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையேற்று, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரித்தன.
ஆனால், 'ரிலையன்ஸ்' உட்பட சில தனியார் எண்ணெய் நிறுவனங்கள், நம் நாட்டின் நிலையை புரிந்து கொள்ளாமல், தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தன. இதனால், பொதுத் துறை நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இது, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம்.
'இந்த தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதியை நிறுத்தி இருந்தால், இந்த அளவிற்கு பிரச்னை வந்திருக்காது' என, அவர் மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார். காரணம், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயரை நேரடியாக குறிப்பிட்டால், பிரச்னை வரும் என்பதால் இப்படி சொன்னாராம்.
'நாட்டின் சமையல் எரிவாயு தேவை, ஒரு நாளைக்கு, 50 லட்சம் சிலிண்டர்கள். போர் காரணமாக, மக்களிடையே பீதி ஏற்பட்டதால், இந்த தேவை ஒரு நாளைக்கு, 75 லட்சமாகியது. இதை சமாளிப்பது எவ்வளவு கடினம்? இதனால் தான், பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தோம்' என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் கூறினார். இப்போது, இந்த தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு அதிக கவனம் செலுத்தாமல், நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றனவாம்.
கருத்துக்கள் சொல்ல; ndussh@dinamalar.in
