குப்பையில் எறிந்த லாட்டரிச்சீட்டு; அள்ளிக்கொடுத்தது ரூ.1 லட்சம் பரிசு
குப்பையில் எறிந்த லாட்டரிச்சீட்டு; அள்ளிக்கொடுத்தது ரூ.1 லட்சம் பரிசு
ADDED : மார் 02, 2025 10:25 AM

திருவனந்தபுரம்: கேரளாவில், குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்ட லாட்டரி சீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு விழுந்தது. குப்பையில் இருந்து பெரும்பாடு பட்டு லாட்டரிச்சீட்டை கண்டுபிடித்த கடைக்காரர், சிசிடிவி காட்சி உதவியுடன் வாங்கியவரை கண்டறிந்த சம்பவம் நடந்துள்ளது.
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கண்ணங்காடு சேர்ந்தவர் மருந்தாளர் ரகு கண்ணன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் லாட்டரிச்சீட்டுகளை வாங்குவதை வழக்கமாக கொண்டு இருந்தார். இவர் கிருஷ்ணன் என்பவரிடம், இரண்டு சீட்டுகளை வாங்கி இருந்தார்.
முடிவு அறிவிக்கப்படும்போது, தான் லாட்டரி சீட்டு வாங்கி கடையில் இல்லாமல், சாம் சாம் என்ற மற்றொரு லாட்டரி கடையில் ரிசல்ட் பார்த்தார். அவர் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு மூன்றாம் பரிசாக, ஒரு லட்சம் ரூபாய் விழுந்திருந்தது.
ஆனால், அவர் அதை சரியாக பார்க்கவில்லை. தான் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு பரிசு எதுவும் விழவில்லை என்று எண்ணிக்கொண்டு, லாட்டரிச்சீட்டுகளை குப்பையில் வீசிச்சென்று விட்டார். ஆனால், அவருக்கு லாட்டரிச்சீட்டு விற்ற கிருஷ்ணன், மறுநாள் ரகுவின் மருந்தகத்திற்குச் சென்று, 'உனக்கு நான் விற்ற லாட்டரி டிக்கெட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது' என்று கூறியுள்ளார்.
திகைத்துப் போன ரகு, அப்போதுதான் தன் தவறை உணர்ந்தார். உடனடியாக தான் ரிசல்ட் பார்த்த லாட்டரிச்சீட்டு கடைக்கு ஓடோடிச்சென்றார். நடந்த விஷயத்தை கண்ணீர் மல்க கூறினார். அவரது வார்த்தைகளில் மனம் உருகிப்போன லாட்டரிச்சீட்டு கடை உரிமையாளர் வினோத், 'நல்ல வேளையாக குப்பைகளில் கிடந்த சீட்டுகளை இரண்டு சாக்குகளில் சேகரித்து கட்டி வைத்துள்ளோம்' என கூறி, இரண்டு பெரிய மூட்டைகளை கொடுத்தார். அதில் ரகுவும், கிருஷ்ணனும் தேடினர்.
பல மணி நேரம் தேடியும், அவர்கள் தேடிய லாட்டரிச்சீட்டு கிடைத்தபாடில்லை. நம்பிக்கை இழந்த ரகு, 'நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்' என்று கூறிக்கொண்டு புறப்பட்டார்.
ஆனால் கடைக்காரரோ, 'வேண்டுமானால், அந்த லாட்டரிச்சீட்டு மூட்டைகளை வீட்டுக்கு கொண்டு சென்று பொறுமையாக தேடுங்கள்' என்று கூறியுள்ளார். ஆனால், ரகு, 'வேண்டாம்' என்று கூறி விட்டு, வருத்தத்துடன் கிளம்பிச்சென்றார்.
அவர் சென்ற பிறகு, தன் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம், அந்த சீட்டை, மூட்டைகளில் தேடிக் கண்டுபிடிக்கும்படி வினோத் கேட்டுக் கொண்டார். அதன்படி கடை ஊழியர்கள் அனைவரும், தங்கள் வேலையை விட்டு விட்டு, லாட்டரிச்சீட்டுகளை சல்லடை போடாத குறையாக தேடினர். அதில் ஒருவர், குறிப்பிட்ட அந்த லாட்டரிச்சீட்டை கண்டுபிடித்து விட்டார். கடை உரிமையாளருக்கோ பெருமகிழ்ச்சி. ஆனால், அடுத்த பிரச்னை, லாட்டரிச்சீட்டை தேடி வந்தவரின் பெயரோ, போன் நம்பரோ அவர்களுக்கு தெரியவில்லை.
எப்படி அவரை கண்டுபிடிப்பது என்று ஆளாளுக்கு தலையை பிய்த்துக் கொண்டனர். கடைசியில், தங்கள் கடையில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த ரகுவின் படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டு, அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். அப்போது ஒருவர், 'இந்த நபர், மருந்துக்கடையில் வேலை பார்ப்பவர். எந்த கடை என்று தெரியாது' என்றார். அந்த தகவல் அடிப்படையில், ஒரு மருந்துக்கடையில் சென்று விசாரித்தனர். மருந்துக்கடைக்காரர் சரியாக, ரகுவின் கடை விலாசத்தை கூறி விட்டார்.
இப்படி நீண்ட போராட்டத்திற்கு பிறகு ரகுவை கண்டுபிடித்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டை வினோத் ஒப்படைத்தார். தன் நிலைமையை உணர்ந்து உதவி செய்த கடைக்காரர் வினோத்துக்கு நன்றி கூறி பெற்றுக்கொண்டார் ரகு. அவர் கூறுகையில், ''தாங்கள் தேடிக்கண்டுபிடித்த அந்த லாட்டரிச்சீட்டை அவர்களே வைத்துக் கொண்டிருந்தாலும் எனக்குத் தெரியாது. தெரியப்போவதும் இல்லை. ஆனால், என்னைத் தேடி வந்து ஒப்படைத்து தாங்கள் நேர்மையாளர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். அவர்களது நேர்மைக்குத்தான் நன்றி கூற வேண்டும்,'' என்றார்.