3ம் கட்ட லோக்சபா தேர்தல்: அசாமில் அதிகபட்சமாக 75.3 % ஓட்டுப்பதிவு
3ம் கட்ட லோக்சபா தேர்தல்: அசாமில் அதிகபட்சமாக 75.3 % ஓட்டுப்பதிவு
UPDATED : மே 09, 2024 05:54 PM
ADDED : மே 07, 2024 07:01 AM

புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்கான மூன்றாம் கட்ட ஓட்டுப் பதிவு இன்று (மே 07) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதில், நாடு முழுதும் உள்ள, பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் உள்ள மக்கள் ஓட்டளித்தனர்.
61.45 சதவீதம் ஓட்டுப்பதிவு
நாடு முழுவதும் 11 மாநிலங்களில் இன்று நடந்த மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தலில், 61.78 சதவீதம் ஓட்டுப்பதிவு ஆகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரவு 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அசாமில் 75.3 சதவீதம் ஓட்டுப்பதிவாகியுள்ளது.
லோக்சபாவுக்கு, ஏப்., 19ல் துவங்கி, ஜூன், 1ம் தேதி வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. தேர்தல் கமிஷன் அறிவிப்பின்படி, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 94 இடங்களுக்கு மூன்றாம் கட்டத்தில் தேர்தல் நடப்பதாக இருந்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் ரஜோரி தொகுதிக்கு இன்று நடப்பதாக இருந்த தேர்தல், பனிப்பொழிவு காரணமாக, 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் சூரத்தில் பா.ஜ., போட்டியின்றி வென்றது. மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் உயிரிழந்ததால் ஒத்திவைக்கப்பட்ட பெதுல் தொகுதிக்கு இன்று தேர்தல் நடந்தது.
இதையடுத்து, குஜராத் உள்பட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 93 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. வரும், 13, 20, 25 மற்றும் ஜூன், 1ம் தேதி அடுத்தகட்ட தேர்தல்கள் நடக்க உள்ளன. ஜூன், 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
இரவு 8 மணி நிலவரப்படி ஓட்டுப்பதிவு
அசாம் -75.3
பீஹார்- 56.55
சத்தீஸ்கர்-66.99
கோவா-74.27
குஜராத்-56.76
கர்நாடகா-70.03
ம.பி.,-63.09%
மஹாராஷ்டிரா-54.77
உ.பி.,-57.34%
மேற்கு வங்கம்-73.93
டாமன் டியூ, தாத்ரா நகர் ஹவேலி- 65.23 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.