பத்ம விருதுகள் வழங்கினார் முர்மு:விஜயகாந்துக்கான விருதை பெற்றார் பிரேமலதா
பத்ம விருதுகள் வழங்கினார் முர்மு:விஜயகாந்துக்கான விருதை பெற்றார் பிரேமலதா
UPDATED : மே 09, 2024 09:25 PM
ADDED : மே 09, 2024 06:57 PM

புதுடில்லி :மறைந்த நடிகர் விஜயகாந்த், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியான மறைந்த பாத்திமா பீவி உள்ளிட்டோருக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார்.
நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டு பாதிக்கும் மேற்பட்டோருக்கு ஏப்., 22ல் விருதுகள் வழங்கப்பட்டன. மீதியுள்ளோருக்கு டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்வில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறைந்த நடிகர் விஜயகாந்த், லடாக்கின் ஆன்மிக தலைவரான மறைந்த டாக்டன் ரின்போசே, உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் கவர்னருமான மறைந்த பாத்திமா பீவி ஆகியோருக்கு மறைவுக்கு பிறகான பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. விஜயகாந்துக்கான விருதை, அவரது மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்டார். பா.ஜ., தலைவர் ஓ.ராஜகோபால், 'பாம்பே சமாச்சார்' நாளிதழின் உரிமையாளர் ஹோர்முஸ்ஜி என் காமா, குஜராத்தின், 'ஜென்மபூமி' நாளிதழின் குழும ஆசிரியரும், தலைமை செயல் அதிகாரியுமான குந்தன் வியாஸ் ஆகியோருக்கும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா பாலி, தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.