ADDED : பிப் 03, 2024 10:56 PM

மூன்று சக்கர நாற்காலியில் நடமாடும் மாற்றுத்திறனாளி நபர் ஒருவர், வாழ்க்கையை சவாலாக ஏற்று, சாதனையாளராக திகழ்கிறார்; மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்கிறார்.
நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளவர்களே, அலுப்பும், சலிப்புமாக பேசுவர். இன்றைய காலகட்டத்தில், குடும்பத்தை காப்பாற்றும் கடமையை, சுகமாக நினைப்பவர்களை விட, சுமையாக நினைப்பவர்களே அதிகம் என்பது, அனைவருக்கும் தெரியும். இது போன்றவர்களுக்கு நடுவில், மாற்றுத்திறனாளி ஒருவர் உழைப்பாளியாக, தன்மானத்துடன் வாழ்கிறார்.
ஆச்சரியம்
கலபுரகியின் கனஜல கேடா கிராமத்தில் வசிப்பவர் நிதின் குந்தாளா, 45. இவரது சுறுசுறுப்பைப் பார்த்து இளைஞர்களே ஆச்சரியப்படுவர். இவரது கால்கள் செயலிழந்துள்ளன. எழுந்து நிற்கவோ, நடமாடவோ முடியாது. மூன்று சக்கர வாகனத்தின் உதவியால் அனைத்து இடங்களுக்கும் செல்கிறார்.
எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ள நிதின், தன் குடும்பத்தை காப்பாற்ற கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். முதலில் நாட்டுக்கோழி வளர்த்தார். ஒரு கோழியை 120 ரூபாய் வீதம் விற்றார்.
அதன் பின் சேவல் வளர்க்க துவங்கினார். கோழி வளர்ப்பில் மாதந்தோறும் 60 முதல் 70,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். யாரிடமும் உதவி கேட்காமல், தன் மூன்று சக்கர வாகனத்தில் சென்று, கோழி குஞ்சுகள் வாங்கி வருகிறார்.
இப்போது அனைத்தும் ஆன்லைன் மயமாக மாறிவிட்டது.
வீட்டில் அமர்ந்தபடி, மொபைல் போனில் ஆர்டர் செய்து, வரவழைப்போர் எண்ணிக்கை அதிகம். எனவே நிதின் வாட்ஸாப் குரூப் அமைத்துக்கொண்டு, கோழி வியாபாரம் செய்கிறார். ஆர்வம் உள்ளவர்களுக்கு கோழிப்பண்ணை குறித்து தேவையான தகவல் தெரிவிக்கிறார்.
அண்டை மாநிலம்
உடல் ஊனம் என கருதி மூலையில் முடங்காமல், கோழிப்பண்ணை வைத்து நடத்துகிறார். 500 கோழிகளுடன் உருவான ஒரு பண்ணை, தற்போது 147 பண்ணைகளாக அதிகரித்துள்ளது.
இந்த பண்ணைகள் கர்நாடகாவின் கலபுரகியிலும், அண்டை மாநிலமான மஹாராஷ்டிராவிலும் வைத்துள்ளார். நிதினின் முயற்சி, மன உறுதி, சாதனைக்கு ஒரு சல்யூட்
- நமது நிருபர் -.