120 கி.மீ., இலக்கை தாக்கும் 'பினாகா' ராக்கெட் சோதனை வெற்றி; ராஜ்நாத் சிங் பாராட்டு
120 கி.மீ., இலக்கை தாக்கும் 'பினாகா' ராக்கெட் சோதனை வெற்றி; ராஜ்நாத் சிங் பாராட்டு
ADDED : டிச 29, 2025 09:29 PM

நமது நிருபர்
ஒடிசாவில் 120 கி.மீ., இலக்கை தாக்கும் 'பினாகா' ராக்கெட்டின் முதல் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சோதனை வெற்றிக்கு பணியாற்றிய அனைவரையும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பாராட்டினார்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சந்திப்பூர் நகரில் உள்ள சோதனைத் தளத்தில், 120 கி.மீ., இலக்கை தாக்கும் 'பினாகா' ராக்கெட்டின் முதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.ராக்கெட் அதன் அதிகபட்ச வரம்பான 120 கி.மீ.க்கு இலக்கை தாக்கி சோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.இந்த சாதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உட்பட பணியாற்றிய அனைவருக்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
இது ராணுவத்தின் திறன்களை அதிகரிக்கும், இது ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று ராஜ்நாத் சிங் கூறினார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டிஆர்டிஓவின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், சோதனையை நேரில் பார்வையிட்டு, பணியாற்றிய அனைவரையும் பாராட்டினார்.
சிறப்பம்சங்கள் என்ன?
120 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட பினாகா ராக்கெட்டுகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தினால் (DRDO) உருவாக்கப்பட்டுள்ளது.நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பினாகா ராக்கெட்டுகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. ஏற்கனவே, தென்மேற்கு ஆசிய நாடான ஆர்மீனியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

