கேரளா மினி பாகிஸ்தானா? மஹா., மாநில அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு
கேரளா மினி பாகிஸ்தானா? மஹா., மாநில அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு
ADDED : டிச 31, 2024 03:27 PM

திருவனந்தபுரம்: கேரளாவை 'மினி பாகிஸ்தான்' என விமர்சித்த மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் நிதிஷ் ரானேவுக்கு கேரள முதல்வர் மற்றும் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது
மஹாராஷ்டிரா மாநில பா.ஜ.,வைச் சேர்ந்தவர் நிதிஷ் ரானே. மாநில துறைமுக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார்.
இவர் புனேயில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: கேரளா 'மினி பாகிஸ்தான்' ஆக மாறி உள்ளது. இதனால், ராகுலும், அவரது சகோதரியும் அத்தொகுதியில் வெற்றி பெறுகின்றனர். அனைத்து பயங்கரவாதிகளும் அவர்களுக்கு ஓட்டுப் போடுகின்றனர். நீங்கள் கேட்டு பார்த்தால், நான் சொல்வது உண்மை என தெரியும். பயங்கரவாதிகளுடன் சென்று அவர்கள் எம்.பி.,க்களாக பதவியேற்று கொண்டனர். இவ்வாறு அவர் பேசினார். இவரது பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: அமைச்சர் பதவியில் தொடர்வதற்கு நிதிஷ் ரானேவுக்கு தகுதியில்லை. அரசியல் அமைப்பை அவமதித்து ரகசிய காப்பு பிரமாணத்தை அவர் மீறியுள்ளார். ஆனால், அவர் நாட்டை ஆட்சி செய்யும் அவர் சார்ந்துள்ள கட்சி இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் உள்ளது ஆச்சர்யமாக உள்ளது என்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் கூறியதாவது: நிதிஷ் கேரளாவின் மதசார்பற்ற மன நிலையை அவமதித்து உள்ளார். பிரதமர் மோடியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஒரே கருத்தை கொண்டு உள்ளனரா? ஆளும் மார்க்சிஸ்ட் அரசின் நிலைப்பாடு தான், பா.ஜ., விஷம் கக்க தூண்டுகிறது. அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். வயநாட்டு தொகுதி மக்களை, பயங்கரவாதிகள் போன்று சித்தரித்து அறிக்கை வெளியிட்டதற்காக காங்கிரஸ் அரசியல் ரீதியாகவும் போராடும் எனக்கூறினார்.
வயநாடு தொகுதியில் பிரியங்கா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் விஜயராகவன், வகுப்புவாத முஸ்லிம் கூட்டணி காரணமாக, பிரியங்காவும், ராகுலும் அத்தொகுதியில் வெற்றி பெற்றார். அவர்களின் ஆதரவு இல்லாமல் ராகுலால் டில்லி சென்றிருக்க முடியாது. பிரியங்காவின் வெற்றிக்கு பின்னால், பிரிவினைவாத சக்திகளின் பங்கு உள்ளது எனக்கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.