15 அடி ஆழ பள்ளத்தில் மண் சரிந்து குழாய் பதிப்பு கூலி தொழிலாளி பலி
15 அடி ஆழ பள்ளத்தில் மண் சரிந்து குழாய் பதிப்பு கூலி தொழிலாளி பலி
ADDED : மார் 27, 2025 12:50 AM

பள்ளிக்கரணை, தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை அரசு உயர்நிலைப் பள்ளி எதிரே, பாரதிதாசன் 2வது தெருவில், பாதாள சாக்கடை திட்டப் பணிக்கு குழாய் பதிக்கப்படுகிறது.
மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பில் நடக்கும் இப்பணிக்காக, பள்ளம் தோண்டப்பட்டு, அதில் ராட்சத குழாய் புதைக்கும் பணியில், நேற்று முன்தினம் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
தோண்டிய மண்ணை, பள்ளம் அருகே குவித்திருந்த நிலையில், இரவு 10:30 மணிக்கு திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதில், 15 அடி ஆழ பள்ளத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு, 55, என்பவர், மண் சரிவில் சிக்கிக்கொண்டார்.
அப்போது, உடன் பணிபுரிந்த ஊழியர்கள், அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியாததால், உடனடியாக பள்ளிக்கரணை காவல் நிலையம் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், பொக்லைன் இயந்திரம் வாயிலாக, மண்ணை அகற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.
எனினும், இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், உயிரிழந்த நிலையில் அன்புவின் உடலை, தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
பள்ளிக்கரணை போலீசார், உடலை மீட்டு , பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டதால், மண் சரிவில் சிக்கி அன்பு உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.