ADDED : மே 15, 2025 09:41 PM
புதுடில்லி:டில்லியில் 111 கிராமங்களுக்கு குழாய் எரிவாயு வினியோகம் செய்யும் திட்டம் துவக்கப்பட்டது. இதன் விழாவில் முதல்வர் ரேகா குப்தா கலந்து கொண்டார்.
துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா தலைமையில் நடந்த விழாவில் முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
111 கிராமங்களுக்கு குழாய் எரிவாயு இணைப்பை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. 24 மணி நேரமும் குழாய் மூலம் எரிவாயு வினியோகம் இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
நகர்ப்புறங்களில் குழாய் மூலம் எரிவாயு வினியோகம் தொடங்கிவிட்டது. ஆனால் கிராமப்புறங்களில் அது கிடைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியால் இது சாத்தியமானது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 116 கிராமங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டில்லி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதற்காக டில்லி அரசின் ஒவ்வொரு அமைச்சரும் பணியாற்றி வருகின்றனர். அடுத்த இரண்டு முதல் இரண்டரை ஆண்டுகளில், டில்லியின் மாற்றப்பட்ட வளர்ச்சி தெரியும்.
வி.கே. சக்சேனா,
துணைநிலை கவர்னர்