சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்காத காங்.,: துணை ஜனாதிபதி சாடல்
சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்காத காங்.,: துணை ஜனாதிபதி சாடல்
UPDATED : பிப் 10, 2024 02:14 PM
ADDED : பிப் 10, 2024 01:59 PM

புதுடில்லி: முன்னாள் பிரதமர் சரண் சிங், நேரு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால், அவருக்கு பாரத ரத்னா விருதை காங்கிரஸ் வழங்கியிருக்கும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை துணை ஜனாதிபதியும் கடுமையாக சாடி உள்ளார்.
முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். பார்லிமென்ட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று இது தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதம் நடந்தது.
அப்போது, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், சரண் சிங்கை அவமதித்ததற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால், அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தியது பெருமைப்படும் தருணம். சரண் சிங்கிற்கு விருது அளித்து பிரதமர் மோடி பெருமைப்படுத்தியதை காங்கிரஸ் கொண்டாட வேண்டும். ஆனால், காங்கிரஸ் ஆட்சியின் போது, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. ஒரு வேளை அவர் நேரு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால், பெயரில் நேரு காந்தி என இருந்து இருந்தால் விருதை காங்கிரஸ் அளித்து இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அரசியல் கட்சி, மதம், ஜாதியை தாண்டி நாட்டிற்காக பணியாற்றிய அனைவருக்கும் காங்கிரஸ் மரியாதை செலுத்துகிறது என்றார்.
அப்போது பேசிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் கூறுகையில், ‛‛ சரண் சிங்கை காங்கிரஸ் அவமானப்படுத்தியது. அவரது பாரம்பரியத்தை அவமானப்படுத்தியது. சரண் சிங்கிற்கு விருது வழங்க அக்கட்சிக்கு நேரம் இல்லை. சரண் சிங் விவகாரத்தில் இது போன்ற சூழலை உருவாக்கி நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயியையும் காயப்படுத்துகிறீர்கள். இதற்கு நாம் தலை குனிய வேண்டும். சரண் சிங்கை அவமானப்படுத்துவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. குறை சொல்ல முடியாத நேர்மை, விவசாயிகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக அவர் நிற்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.