வழிபாட்டு தலங்கள் சட்டம் வழக்கு: இ.கம்யூனிஸ்ட் இடையீட்டு மனு
வழிபாட்டு தலங்கள் சட்டம் வழக்கு: இ.கம்யூனிஸ்ட் இடையீட்டு மனு
ADDED : டிச 15, 2024 04:27 AM

புதுடில்லி: வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்கள் சட்டம் - 1991ல் சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் இது தொடர்பாக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் 2022ல் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்குகள் மீது, நீண்ட நாட்களாக விசாரணை எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பாகவும், சில தனிநபர்கள் சார்பிலும் இந்த சட்டத்தில் எந்த மாற்றங்களும் செய்ய கூடாது.
இச்சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த அனைத்து மனுக்களையும் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தன் நிலைப்பாட்டை நான்கு வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என, கடந்த 12ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் வழக்கறிஞர் ராம்சங்கர், உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், 'வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கில் எங்களையும் மனுதாரராக இணைக்க வேண்டும்.
'இந்த விவகாரத்தில் எங்களது தரப்பில் எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, அவர் தெரிவித்துள்ளார்.