ADDED : டிச 14, 2024 11:24 PM

பெங்களூரு: பெங்களூரில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக 11,137 மரங்கள் வெட்டப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இயற்கையை அழிக்க முயற்சி செய்வதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதங்கம் வெளிப்படுத்தி உள்ளனர்.
பெங்களூரின் கெம்பாபுராவில் இருந்து ஹெப்பால், நாகஷெட்டிஹள்ளி, பி.இ.எல்., சதுக்கம், முத்யாலயநகர், பீன்யா, கன்டீரவா நகர், பிரீடம் பைட்டர்ஸ் காலனி, சவுடேஸ்வரிநகர், சும்மனஹள்ளி கிராஸ், பி.டி.ஏ., காம்பிளக்ஸ் நாகரபாவி, பாபிரெட்டிபாளையா, விநாயகா லே - அவுட், நாகரபாவி சதுக்கம், மைசூரு ரோடு, துவாரகா நகர், ஒசகெரேஹள்ளி, கமக்யா சந்திப்பு, கதிரேனஹள்ளி, ஜே.பி.நகர், ஜே.பி.நகர் 5வது பேஸ் வழியாக ஜே.பி.நகர் 4வது பேஸ் வரை 32.15 கி.மீ., துாரத்திற்கு புதிய மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது.
இதுபோல கடபகெரேயில் துவங்கி காமத் லே - அவுட், பேடரஹள்ளி, ஹீரோஹள்ளி, அஞ்சனாநகர், சும்மனஹள்ளி கிராஸ், காமாட்சிபாளையா, கே.ஹெச்.பி., காலனி வழியாக ஒசஹள்ளி வரை 12.50 கி.மீ., துாரத்திற்கு இன்னொரு மெட்ரோ பாதை அமைய உள்ளது. இந்த பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கி உள்ளன.
இந்த இரு மெட்ரோ பணிகளுக்காக 11,137 மரங்களை மெட்ரோ நிர்வாகம் வெட்ட உள்ளதாக தகவல் வெளியானது. இயற்கையை அழிக்க முயற்சி செய்வதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் விஜய் நிஷாந்த் கூறுகையில், ''மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்டும் முன்பு, பொதுமக்கள் கருத்தை கேட்க வேண்டும். திடீரென மரங்களை வெட்ட கூடாது. வெட்டப்படும் மரங்களை வேறு இடங்களில் நடுவதற்கும் இடம் இல்லை,'' என்றார்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் மகேஸ்வர ராவ் கூறுகையில், ''முடிந்த இடங்களில் அதிக மரங்கள் வளர்க்கவும், வனத்தை உருவாக்கவும் திட்டமிட்டு உள்ளோம். சுற்றுச்சூழல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் 43.53 கோடி செலவில், வனத்தை உருவாக்கும் திட்டத்தை, மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது,'' என்றார்.
மெட்ரோ ரயில் நிர்வாக தலைமை செய்தி தொடர்பாளர் யஷ்வந்த் சவுகான் கூறுகையில், '' மெட்ரோ 3வது கட்ட பணியில் கெம்பாபுரா - ஜே.பி.நகர் 4வது பேஸ், கடபகெரே - ஒசஹள்ளி வரை மெட்ரோ பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
''இந்த பாதையில் 11,137 மரங்கள் வரும் என்று, எங்களிடம் தகவல் உள்ளது. மெட்ரோ பணிக்காக, அனைத்து மரங்களையும் வெட்டுவோம் என்று அர்த்தம் இல்லை. சிறிய செடி முதல் பெரிய மரம் வரை, அனைத்தையும் கணக்கிட்டு உள்ளோம்,'' என்றார்.