குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
ADDED : டிச 27, 2024 05:42 AM
பெங்களூரு: குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க மின்சாரத் துறை திட்டமிட்டுள்ளது. இதனால் குப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, பெங்களூரு மாநகராட்சி எதிர்பார்க்கிறது.
இது தொடர்பாக, மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ராம்நகர், பிடதியில் 370 கோடி ரூபாய் செலவில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அரசு சார்பில் அமைக்கப்பட்ட இந்த மின் உற்பத்தி நிலையத்தில், மின் உற்பத்தி திறனை அதிகரிக்க மின்சாரத்துறை திட்டம் வகுத்துள்ளது. இதில் பெங்களூரு மாநகராட்சி ஆர்வமாக உள்ளது.
இதன் மூலம் அதிகரிக்கும் குப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, மாநகராட்சி கருதுகிறது. ஆனால், தகுதியான கழிவுகள் என்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே, மின்சாரம் தயாரிக்க முடியும்.
பிடதி மின் உற்பத்தி நிலையம், அதிகாரபூர்வமாக தன் பணியை துவக்கவில்லை என்றாலும், டிசம்பர் 19ம் தேதி மின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. தினமும் 11.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. பெங்களூரில் தினமும் 5,800 டன் குப்பை உருவாகிறது.
இதில் 2,000 டன் உலர்ந்த குப்பையில் 600 டன் குப்பை, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மின் உற்பத்தி திறன் அதிகரித்தால், குப்பை பிரச்னை படிப்படியாக நீங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.