ADDED : ஏப் 04, 2025 04:02 AM

கொச்சி; கொச்சி அருகே, ஏரியில் குப்பை கொட்டியதற்காக பிரபல பின்னணி பாடகர் எம்.ஜி.ஸ்ரீகுமாருக்கு உள்ளாட்சி அமைப்பு சார்பில், 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் திரைப்பட பின்னணி பாடகர் எம்.ஜி.ஸ்ரீகுமார். இவர் தமிழில் காதல் தேசம், மிஸ்டர் ரோமியோ, ஜீன்ஸ் உள்ளிட்ட படங்களிலும், பிற மொழிகளிலும் 2,500-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
இவருக்கு சொந்தமான வீடு கொச்சி அருகே முலவூக்காடு என்ற பகுதியில் உள்ளது. ஏரி அருகே இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த பகுதியில் படகு பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணி ஒருவர், ஸ்ரீகுமார் வீட்டை வீடியோ எடுத்தார்.
அந்த சமயத்தில் வீட்டில் இருந்து வந்த நபர் கையில் வைத்திருந்த குப்பை நிரப்பிய கவரை ஏரியில் வீசிவிட்டு சென்றார்.
இது, சுற்றுலா பயணி எடுத்த வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து முலவூக்காடு கிராம பஞ்சாயத்து, ஸ்ரீகுமாருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தது. இதையேற்று, அபராதத்தை கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடம், ஸ்ரீகுமார் செலுத்தினார்.

