'ப்ளீஸ் வீட்டை காலி செய்யுங்க': மணி சங்கர் அய்யருக்கு நோட்டீஸ்
'ப்ளீஸ் வீட்டை காலி செய்யுங்க': மணி சங்கர் அய்யருக்கு நோட்டீஸ்
UPDATED : பிப் 01, 2024 11:01 AM
ADDED : ஜன 31, 2024 10:22 PM

புதுடில்லி: ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து, காங்., மூத்த தலைவர் மணி சங்கர் அய்யரின் மகள் சுரன்யா அய்யர் சர்ச்சை கருத்து தெரிவித்ததை அடுத்து, வீட்டை காலி செய்யும்படி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. புதுடில்லியின் ஜங்புரா என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், காங்., மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், அவரது மகள் சுரன்யா அய்யர் வசித்து வருகின்றனர்.
ஜன., 20ம் தேதி, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், சுரன்யா அய்யர் வெளியிட்ட பதிவில், 'முஸ்லிம் தரப்புக்கு ஆதரவாக, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போகிறேன்' என பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மத உணர்வை புண்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாகக் கூறி, வீட்டை காலி செய்யும்படி, மணி சங்கர் அய்யர், அவரது மகள் சுரன்யா அய்யர் ஆகியோருக்கு, குடியிருப்போர் நலச்சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதன் விபரம்:உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இத்தகைய கருத்து தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது. மற்ற குடியிருப்பாளர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்க வேண்டாம். அமைதியை சீர்குலைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். இந்த தவறுக்கு, மகள் சுரன்யா அய்யரை, மணி சங்கர் அய்யர் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், வீட்டை காலி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.