தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சொற்ப உதவி தொகையால் சறுக்கும் 'பி.எம்., இன்டர்ன்ஷிப்' திட்டம்?

 சொற்ப உதவி தொகையால் சறுக்கும் 'பி.எம்., இன்டர்ன்ஷிப்' திட்டம்?

 சொற்ப உதவி தொகையால் சறுக்கும் 'பி.எம்., இன்டர்ன்ஷிப்' திட்டம்?


ADDED : மார் 16, 2026 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 03:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏழை, எளியவர்களின் கல்வி அறிவுக்கும், தொழில் திறனுக்கும் நடுவில் இருக்கும் இடைவெளியை நிரப்புவதற்காக, 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கனவு திட்டம், பி.எம்., இன்டர்ன்ஷிப். பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும், ஏழை குடும்பத்து மாணவருக்கும் மாநகரங்களில் உள்ள பெருநிறுவனங் களில் பணியாற்றுவதற்குரிய திறனை ஏற்படுத்தி தரும் நோக்கில் துவக்கப்பட்ட திட்டம் இது.

படிப்பை முடித்துவிட்டு பணியை நோக்கி செல்லும் மாணவர்கள், அவர்களுக்கு பணித்திறன் அளித்து வேலை வழங்கும் நிறுவனங்கள் ஆகிய இரு தரப்புக்குமே இத்தகைய திட்டத்துக்கான தேவை மிக அதிகமாகவே உள்ளது. அந்த வகையில், பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் அமோக வரவேற்பை பெறும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேர்மாறாக இருப்பதுதான் சோகம்.

அதிர்ச்சி தரும் தரவுகள்


மஹாராஷ்டிராவை சேர்ந்த யாஷ் பட்வால்கர் என்ற இளைஞர், பி.எம்., இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் புனேவின் டெக் மஹிந்திராவில் கடந்த ஆண்டு பயிற்சி பணியாளராக சேர்ந்தார். 5,000 ரூபாய் உதவித்தொகை. செலவோ 7,000 ரூபாய்க்கும் மேல். இருந்தாலும், சேர்த்து வைத்திருந்த தொகையை எல்லாம் செலவு செய்து, வைராக்கியமாக 12 மாத பயிற்சியை முடித்து, வேலையும் பெற்று விட்டார்.

ஆனால், அவரையும் சேர்த்து, அந்த ஆண்டில் பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் சேர்ந்து வேலைவாய்ப்பு பெற்றவர்கள் ஒட்டுமொத்தமாக வெறும் 95 பேர் மட்டும்தான். 10.76 லட்சம் விண்ணப்பங்களை கிட்டத்தட்ட 4 லட்சம் மாணவர்கள் அனுப்பியதில், வேலை கிடைத்தது, 100 பேருக்கும் கீழ்.

மொத்தம் 12,831 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 86 கோடி ரூபாய் செலவிடப்பட்ட இவ்வளவு பெரிய திட்டத்தின் பலன் சரிவர சென்றடையவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? ஒன்றல்ல, பல.

உதவித்தொகை குறைவு


பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் பயற்சி பணியில் சேர்வோருக்கு 4,500 - 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. சிறு ஊர்களில் இருந்து நகரங்களுக்கு வரும் மாணவர்களுக்கு, தங்குமிட வாடகை, நிறுவனத்துக்கு வந்து போக போக்குவரத்து கட்டணம், சாப்பாடு செலவு, இதையெல்லாம் கணக்கு பார்த்தால் இந்த தொகை சொற்பம்.

யாஷ் பட்வால்கர் இதை முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான், திட்டமிட்டு காய் நகர்த்தினார். பகுதி நேரமாக நிறுவனங்களில் வேலை செய்து சேமித்த பணத்தை கொண்டு, நிறுவனம் தருவதை மட்டும் நம்பியிரா மல், பயிற்சியை முடித்தார்.

ஆனால், எல்லா மாணவர்களாலும் இது முடியாது. அதிலும் குறிப்பாக, பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று இத்திட்டம் விரும்புகிறதோ, அத்தகைய ஏழை மாணவர்களால் இயலாது.

இதுதான், பயிற்சியில் சேர்ந்தவர்கள் பாதியில் விலகுவதற்கான காரணம். முடித்த பின் வேலை கிடைக்கும் என்ற நிச்சயத்தன்மை இல்லாமல், கடன் வாங்கி பயிற்சியில் நீடிக்க பலரும் முன்வருவதில்லை.

Image 1549404

ஏற்கப்படாத அழைப்பு


இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவதற்காக 4 லட்சம் பேர் அனுப்பிய விண்ணப்பங்களில், 1.53 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. ஆனால், அவர்களில் 52,700 பேர் மட்டுமே அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டனர். அவர்களிலும், வெறும் 8,700 பேர்தான் பயிற்சி பணியில் சேர்ந்தனர்.

இப்படி தேவை இருந்தும் இத்தனை பேர் திட்டத்தை நிராகரித்ததற்கு காரணம், பயிற்சி ஊதியம் குறைவு என்பது தான். மற்ற இன்டர்ன்ஷிப் திட்டங்களில் இதைவிட மிக அதிகமான ஊதியம் கிடைக்கிறது.

நிறுவனங்கள் சொந்தமாக நடத்தும் தொழில் பயிற்சி திட்டங்களுக்கு 10,000 - 25,000 ரூபாய் தரப்படுகிறது. இப்படி கட்டுப்படியாக கூடிய பயிற்சி திட்டங்கள் இருக்கும்போது, இத்திட்டத்தை விரும்புவோர் குறைவே.

பொருந்தாத இணைப்பு


இந்த திட்டம் சறுக்கியதற்கு வெறும் பணம் மட்டும் காரணமில்லை. நிறுவனம், மாணவர் ஆகிய இரு தரப்புக்கும் இடையே பாலமாக இருப்பதற்கு பதிலாக, யார் யாரோடு சேர வேண்டும் என்ற முடிவையும் அரசே எடுப்பதுதான் சிக்கல்.

பி.எம்., இன்டர்ன்ஷிப் வலைதளத்தில் விண்ணப்பிக்கும்போது, எந்த நிறுவனத்தில் பயிற்சி பெற வேண்டும் என்பதை முடிவு செய்யும் வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. அதே போல், மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுவதில்லை. எனவே, தங்கள் இலக்குக்கு மாறான நிறுவனங்கள் கைகாட்டப்படும்போது, மாணவர்கள் திட்டத்தில் இருந்து விலகுகின்றனர்.

கட்டிப்போடும் கால நிர்ணயம்


பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், ஒருவர் 12 மாதங்கள் பயிற்சி பெற்று ஆக வேண்டும். அதாவது, மூன்றே மாதங்களில் பயிலக்கூடிய சில்லரை விற்பனை துறை, ஆறு மாதங்களில் பயிற்சி முடிந்துவிட கூடிய ஐ.டி., துறை என எல்லா துறைகளிலும் 12 மாதங்கள் பயிற்சி பெற்றே ஆக வேண்டும்.

நீண்ட காலம் நிர்ணயிப்பதும் மாணவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் பிரச்னை. இதுவும் இந்த திட்டத்தின் பின்னடைவுக்கான முக்கிய காரணம். இது தவிர, தொழில் திறனில் மாணவர்கள் பெற்ற தேர்ச்சியை பற்றி குறிப்பிடாமல், வெறுமனே 'பயிற்சியை நிறைவு செய்தார்' என்பதை மட்டும் குறிப்பிடும் வலுவற்ற சான்றிதழ் மற்றும் திறன் படைத்தோர் அதிகம் தேவைப்படும் சிறு, குறுந்தொழில்களை புறந்தள்ளி, மிக பெரிய 500 நிறுவனங்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பது குறைகளும் உள்ளன.

எனவே, பயிற்சி ஊதியத்தை உயர்த்துவது, எந்த நிறுவனத்தில் என்ன பயிற்சி மற்றும் யாரை தங்கள் நிறுவனத்தில் சேர்ப்பது என்பதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை மாணவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்குவது அவசியம்.

பயிற்சி காலத்தின் நெகிழ்வு தன்மை உள்ளிட்ட பல முக்கிய சீர்திருத்தங்களை செய்தால் தான், இந்த திட்டத்துக்கு வரவேற்பு கிடைக்கும். ஏழை இளைஞர்களின் பெருநிறுவன வேலைவாய்ப்பு கனவை நனவாக்க விரும்பும் அரசின் நோக்கமும் நிறைவேறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us