சமூகத்தை பிளவுபடுத்த முயற்சி; பிரதமர் மோடி குற்றச்சாட்டு
சமூகத்தை பிளவுபடுத்த முயற்சி; பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ADDED : நவ 12, 2024 12:22 AM
ஆமதாபாத்: ''சில தேச விரோதிகள் சுயநலத்துக்காக சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். அவர்களை நாம் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குஜராத்தின் கேடா மாவட்டத்தின் வட்தல் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலின், 200வது ஆண்டு விழா நேற்று நடந்தது.
இதில், வீடியோ கான்பரஸ் வாயிலாக பங்கேற்று, பக்தர்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது:
வரும் 2047க்குள், நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற, நாட்டு மக்களிடையே ஒற்றுமையும், தேச ஒருமைப்பாடும் முக்கியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் சமூகத்தை ஜாதி, மதம், மொழி, ஆண் - பெண், கிராமம் -- நகரம் என பிரிக்க, சிலர் முயற்சிக்கின்றனர்.
இதற்கு, அவர்களின் குறுகிய மனப்பான்மை தான் காரணம். இந்த தேச விரோதிகளை, நாம் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும். நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான முதல் படி தான், சுயசார்பு இந்தியா.
இன்று, நான் சந்திக்கும் பெரும்பாலான உலகத் தலைவர்கள், இந்திய இளைஞர்கள் தங்கள் நாடுகளில் பணியாற்ற வேண்டும் என, விருப்பம் தெரிவிக்கின்றனர். நம் இளைஞர்கள் மிகவும் திறனுடையவர்கள்.
அவர்களின் பங்கு, நம் நாட்டுக்கும், உலகுக்கும் தேவை. திறமையான இந்திய இளைஞர்களுக்கான தேவை எதிர் காலத்தில் பன்மடங்கு அதிகரிக்கும். குஜராத் முதல்வராக இருந்த காலத்திலிருந்தே சுவாமிநாராயண் கோவிலுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.
உ.பி.,யின் பிரயாக்ராஜில், 2025 ஜன., - பிப்ரவரியில் கும்பமேளா நடக்கிறது. 12 ஆண்டுகளுக்குப் பின் கொண்டாடப்படுவதால், 'பூர்ண கும்பம்' என அழைக்கப்படுகிறது.
இந்த கும்பமேளாவின் முக்கியத்துவம் குறித்து, உலகம் முழுதுமுள்ள தங்களின் கோவில்கள் வாயிலாக, ஸ்ரீ சுவாமிநாராயண் பக்தர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

