இந்திய - சீன எல்லையில் அமைதி: அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்திப்புக்கு பிறகு மோடி பேச்சு
இந்திய - சீன எல்லையில் அமைதி: அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்திப்புக்கு பிறகு மோடி பேச்சு
UPDATED : ஆக 31, 2025 05:42 PM
ADDED : ஆக 31, 2025 10:06 AM

பீஜிங்: இந்திய- சீன எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற்றதால் அமைதி ஏற்பட்டுள்ளது என அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஏழு ஆண்டுகளுக்கு பின் நேற்று சீனா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், அங்குள்ள ஹோட்டலுக்கு சென்ற பிரதமரை வரவேற்கும் விதமாக, இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தற்போது, சீனாவின் தியான்ஜின் நகரில் 2 நாட்கள் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டுக்கு முன்னதாக, சீனஅதிபர் ஜி ஜின்பிங்யை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். கடந்த 2020ல், ஜம்மு - காஷ்மீரின் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, இருநாட்டு உறவும் பாதிக்கப்பட்டது.
பல கட்ட பேச்சைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் இருநாட்டு வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபடலாம் என கடந்தாண்டு முடிவு செய்யப்பட்டதை அடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி இன்று பேச்சு நடத்தினார்.எல்லைப் பிரச்னையில் சுமுக முடிவு காண இருவரும் ஆலோசனை நடத்தியதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
முன்னதாக 2024ம் ஆண்டு ரஷ்யாவின் கசானில் நடந்த பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லையில் அமைதி
பின்னர் பிரதமர் மோடி கூறியதாவது: இந்திய- சீன எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற்றதால் அங்கு அமைதி, உறுதிநிலை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தியா- சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவு மனிதகுலத்தின் நலனுக்கு வழிவகுக்கும். மேலும் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என உறுதிபூண்டுள்ளோம். இருநாட்டு உறவால 280 கோடி பேருக்கு பலன் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மிக முக்கியம்
சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாவது: சீனாவும், இந்தியாவும் பழம் பெரும் நாகரிகம் கொண்ட நாடுகள். நாங்கள் உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். இந்தியா-சீனா ஆகிய இரண்டு நாடுகளும் நல்ல அண்டை நாடாகவும், நண்பர்களாகவும் ஒன்றிணைவது மிக முக்கியம். இவ்வாறு ஜி ஜின் பிங் கூறினார்.
@block_B
தியான்ஜின் ஏன்?
தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டை அங்கு நடத்துவது ஏன் என பலருக்கும் கேள்வி எழுந்தது.
பீஜிங் தலைநகராக இருக்கும் போதும், எஸ்சிஒ அமைப்பு ஷாங்காய் நகரில் தான் பிறந்தது.
ஆனால், இந்த மாநாட்டை தியான்ஜின் நகரில் கூட்டுவது ஏன் என பலரும் கேள்விகளை எழுப்பத் துவங்கினர்.
இதற்கான விடை, வரலாற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதன்படி, ஒரு காலத்தில் இந்த நகரம் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்பில் இருந்தது. பல பகுதிகளை வெளிநாட்டினர் நிர்வகித்து வந்தனர்.
சீனாவுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் இருந்தது. ஆனால், வெளிநாட்டினரின் பிடியில் இருந்த தெருக்கள் அனைத்தும், சீனர்களின் கைகளுக்குள் வந்துள்ளது. வெளிநாட்டினரின் கட்டடங்கள் அனைத்தும் சீன கபேக்களாகவும், கடைகளாகவும் மாறியுள்ளன. இங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டை நடத்துவதன் மூலம், உலகிற்கு ஒரு செய்தியை அனுப்ப சீனா விரும்புகிறது. ஒரு காலத்தின் வெளிநாட்டினரின் பிடியில் இருந்த நகரம், தற்போது மேற்கத்திய நாடுகளின் உலக வரிசைக்கு எதிராக சவால் விடும் மேடையாக பயன்படுத்துகிறோம் என்பதே அந்தச் செய்தி.