75 ஆண்டுகளாக காங்கிரசால் செய்ய முடியாததை செய்த பிரதமர் மோடி: அனுராக் தாக்கூர் பாராட்டு
75 ஆண்டுகளாக காங்கிரசால் செய்ய முடியாததை செய்த பிரதமர் மோடி: அனுராக் தாக்கூர் பாராட்டு
ADDED : மார் 13, 2024 04:41 PM

புதுடில்லி: கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரசால் செய்ய முடியாததை பிரதமர் மோடி செய்துள்ளார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டி உள்ளார்.
இது குறித்து அனுராக் தாக்கூர் கூறியதாவது: சி.ஏ.ஏ., அமலாக்கம் குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதைக் கேட்டு நான் வேதனை அடைந்தேன். ஒருவர் எப்படி இவ்வளவு உணர்ச்சியற்றவராக இருக்க முடியும். பெண்களின் அவலநிலையையும், அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதத்தையும் அவர் கற்பனை செய்து பார்க்கத் தவறிவிட்டார்.
சி.ஏ.ஏ., என்பது துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கும் ஒரு செயலாகும். யாருடைய குடியுரிமையையும் பறிக்கவில்லை. டில்லியில் இருந்து கெஜ்ரிவால் செய்தியாளர் சந்திப்பு நடத்த அவசியம் என்ன?. கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரசால் செய்ய முடியாததை பிரதமர் மோடி செய்துள்ளார். அட்டூழியங்களை எதிர்கொண்ட மக்களுக்கு குடியுரிமை. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ரூ.8,399 கோடி மதிப்பில், டில்லியில் இரண்டு மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அனுராக் தாக்கூர் கூறியதாவது: இன்று டில்லியில் இரண்டு புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பணிகள் வரும் 2029ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். இது போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டைக் குறைக்க உதவுவதோடு பயண நேரத்தை குறைக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

