ராணுவத்தின் மூத்த அதிகாரிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி
ராணுவத்தின் மூத்த அதிகாரிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி
ADDED : ஆக 18, 2025 10:21 PM

புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல்முறையாக அடுத்த மாதம் கோல்கட்டாவில் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் உட்பட முப்படைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இம்மாநாட்டில், நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள் மற்றும் எதிர்காலத்தில் பாதுகாப்பு படை தொடர்பான அரசின் கொள்கை குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், எதிர்காலத்தில் முப்படைகளும் போர்களை இணைந்து எதிர்கொள்ளும் வகையில் 3 பிராந்திய கட்டளை மையங்களை உருவாக்குவது குறித்தும் பிரதமர் மோடியிடம் இம்மாநாட்டில் விளக்கமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிராந்திய கட்டளை மையங்கள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உ.பி.,யின் பிரயாக்ராஜ் மற்றும் கர்நாடகாவின் கர்வார் பகுதிகளில் அமைய உள்ளது. இந்த மையங்கள் மேற்கு, வடக்கு மற்றும் கடலோர எல்லைகளில் பாதுகாப்பு பணிகளை கையாளும்.
இதற்கான பணிகளை முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் ஈடுபட்டுள்ளார். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இந்தப் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அமைப்புகள் குறித்தும், ஆப்பரேஷன் சிந்தூரில் அதன் செயல்பாடு குறித்தும் பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.