தாய்லாந்தில் 'பிம்ஸ்டெக்' மாநாடு; முக்கிய தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
தாய்லாந்தில் 'பிம்ஸ்டெக்' மாநாடு; முக்கிய தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
UPDATED : ஏப் 05, 2025 05:36 AM
ADDED : ஏப் 04, 2025 01:31 PM

பாங்காங்: தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றுள்ள பிரதமர் மோடி வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், 'பிம்ஸ்டெக்' எனப்படும் வங்கக் கடல் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சி அமைப்பின் ஆறாவது மாநாடு, இன்று (ஏப்ரல் 04) நடைபெறுகிறது. ஏற்கனவே, இந்தியா - தாய்லாந்து இடையேயான உறவை, பல்துறை உறவாக உயர்த்த, பிரதமர் நரேந்திர மோடி - தாய்லாந்து பிரதமர் பெடோங்ட்ரான் ஷினவாத்ரே இடையே நடந்த பேச்சில் முடிவு செய்யப்பட்டது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 04) தாய்லாந்தில் பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுாஸ் சந்தித்துப் பேசினார். மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங்யை பிரதமர் மோடி சந்தித்தார்.
இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங்யை சந்தித்தேன். சமீபத்திய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு மீண்டும் ஒருமுறை இரங்கல் தெரிவித்தேன்.
இந்த நெருக்கடியான நேரத்தில் மியான்மரின் நமது சகோதர சகோதரிகளுக்கு உதவ இந்தியா முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பல துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து நாங்கள் விவாதித்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.