பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து திரும்ப திரும்ப புகழ்கிறார் சசி தரூர்
பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து திரும்ப திரும்ப புகழ்கிறார் சசி தரூர்
ADDED : ஜூன் 24, 2025 12:28 AM

புதுடில்லி,: “பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவை உலக அரங்கில் நம் நாட்டின் மிக முக்கிய சொத்தாக திகழ்கிறது,” என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பாராட்டி உள்ளார்.
காங்., மூத்த தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூர் சமீபகாலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டி பேசி வருகிறார்.
இது, காங்கிரசார் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், சசி தரூர் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை.
'ஆப்பரேஷன் சிந்துார்'
சமீபத்தில், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை பற்றி வெளிநாடுகளில் எடுத்துரைத்து விட்டு நாடு திரும்பிய சசி தரூர், பிரதமர் மோடியை பாராட்டினார்.
இது, காங்., தலைமையை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், நாளிதழ் ஒன்றில் அவர் எழுதிய கட்டுரை நேற்று வெளியானது. அதன் விபரம்:
பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவை உலக அரங்கில் நம் நாட்டின் முக்கிய சொத்தாக திகழ்கிறது; அதற்கு நாம் அனைவரும் கூடுதல் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். சர்வதேச நாடுகளுடன் போட்டியிட தொழில்நுட்பம், வர்த்தகம், பாரம்பரியம் ஆகிய மூன்றிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும்.
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை பற்றி எடுத்துரைக்க அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய குழு வெளிநாடுகளுக்கு சென்றதன் வாயிலாக, நம் ஒற்றுமையின் வெளிப்பாடு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
இப்பயணத்தின் வாயிலாக ஒற்றுமையின் சக்தி, தெளிவான தகவல் தொடர்பின் செயல்திறன், நீடித்த உறவு உள்ளிட்ட பலவற்றை அறிந்தேன். இதேபோல், சிக்கலான சர்வதேச உறவுகளை கையாளவும் இத்தகைய நடவடிக்கைகள் நம் நாட்டிற்கு உதவும்.
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையால், பாகிஸ்தானில் அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தென் அமெரிக்க நாடான கொலம்பியா, கண்டனம் தெரிவிக்க எண்ணியது.
வலியுறுத்தல்
எனினும், எங்கள் குழு, ஆதாரத்துடன் தெளிவாக விளக்கியபின் கொல்லப்பட்டோர் பயங்கரவாதிகள் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
இதேபோல் அமெரிக்காவிற்கு நாங்கள் சென்றபோது, பாகிஸ்தான் பிரதிநிதிகளும் அங்கே இருந்தனர்.
அந்நாட்டில் இயங்கும் லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.