UPDATED : நவ 15, 2024 06:39 PM
ADDED : நவ 15, 2024 06:34 PM

ஜமுய்: பீகாரில், தமிழக பழங்குடி தம்பதியுடன் பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட செல்பி படம் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பீகார் மாநிலம், ஜமுய் நகரில், வெள்ளையர்களை எதிர்த்து போராடியவரும், நிலத்தின் தந்தை என்று போற்றப்படுபவருமான பிர்சா முண்டாவின் 150வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவரை பழங்குடியின மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களின் இசை வாத்தியத்தை கண்டு ஆச்சரியம் கொண்ட பிரதமர் மோடி, அதை வாங்கி தானும் இசைத்து மகிழ்ந்தார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, ஜனஜாதியா கவுரவ் திவாஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு பழங்குடியின சமூகத்தினரின் பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அங்கு வரிசையாக அமைக்கப்பட்டு இருந்த ஸ்டால்களை பார்த்த படியே அவர் சென்றார். அங்கு அரியலூரைச் சேர்ந்த தர்மதுரை, எழிலரசி தம்பதியினர் ஸ்டால் ஒன்றை அமைத்திருந்தனர். பிரதமர் மோடி அங்கு வந்தபோது, தமிழக பழங்குடியின தம்பதியினர் தாங்கள் காட்சிக்கு வைத்திருந்த பொருட்களை பற்றி கூறினர்.
பின்னர் அவருடன் ஒரு செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர். அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி அவர்களுடன் ஒரு செல்பி போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.