பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: வர்த்தகம், பாதுகாப்பு குறித்து ஆலோசனை
பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: வர்த்தகம், பாதுகாப்பு குறித்து ஆலோசனை
UPDATED : ஆக 07, 2025 10:18 PM
ADDED : ஆக 07, 2025 09:57 PM

புதுடில்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்க வரி விதித்துள்ள சூழ்நிலையில் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்து வருகிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரேசிலிய பொருட்களுக்கும் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.
இது தொடர்பாக பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கூறுகையில், பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உட்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும். அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன் எனக்கூறியிருந்தார்.
இன்று டில்லியில் நடந்த மாநாட்டிலும் பிரதமர் மோடி பேசும் போது,மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை. எந்த விலை கொடுத்தாவது இந்திய விவசாயிகளை காப்பேன் என உறுதிபடத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி, பிரேசில் அதிபருடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்க வரிவிதிப்பு
இந்தியா, பிரேசில் இரு நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இந்த வரி விதிப்புக்கு இரு நாடுகளுமே கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில் இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது