ஒலிம்பிக் கமிட்டி தலைவருடன் பிரதமர் மோடி பேச்சு: வினேஷ் போகத் தகுதி நீக்கம் பற்றி அமைச்சர் தகவல்
ஒலிம்பிக் கமிட்டி தலைவருடன் பிரதமர் மோடி பேச்சு: வினேஷ் போகத் தகுதி நீக்கம் பற்றி அமைச்சர் தகவல்
UPDATED : ஆக 07, 2024 05:59 PM
ADDED : ஆக 07, 2024 03:52 PM

புதுடில்லி: ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா லோக்சபாவில் விளக்கமளித்தார். அப்போது, தகுதி நீக்க விவகாரம் குறித்து ஒலிம்பிக் கமிட்டி தலைவருடன் பிரதமர் மோடி பேசியுள்ளதாக தெரிவித்தார்.
ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 50 எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார். இதனால் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியான நிலையில், அவர் 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பதாக கூறி ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்தது. அரசியல் தலைவர்கள் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் கூறியுள்ளனர். தகுதி நீக்கம் தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா லோக்சபாவில் தகவல் அளித்தார்.
அவர் பேசியதாவது: வினேஷ் போகத்தின் எடை 100 கிராம் கூடுதலாக இருந்தது. அவருக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்தது. ஒலிம்பிக் கமிட்டியிடம் நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம். அவர்களிடம் தகுதி நீக்கம் குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத்துக்கு சிறந்த பயிற்சியாளர், ஆலோசகரை கொடுத்துள்ளோம்.
இதுவரை வீழ்த்த முடியாத வீராங்கனையாக இருந்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக் கமிட்டி தலைவருடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். வினேஷ் போகத்துக்கு தேவைப்பட்டால் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

