அமைதி திரும்ப அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி
அமைதி திரும்ப அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி
ADDED : ஆக 11, 2025 07:29 PM

புதுடில்லி: உக்ரைன் நாட்டில் அமைதி திரும்ப தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
2022ம் ஆண்டு உக்ரைன், ரஷ்யா இடையே தொடங்கிய போர் இன்னமும் ஓயவில்லை. போரை நிறுத்த உலக நாடுகள் பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டாலும் பலனில்லை. அமெரிக்க அதிபர் டிரம்பும் இருநாடுகள் இடையே போர் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
அதன் முக்கிய கட்டமாக, ஆக. 15ம் தேதி ரஷ்ய அதிபர் புடினை, டிரம்ப் சந்திக்க உள்ளார். இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பு அலாஸ்காவில் நடைபெறுகிறது.
இந்நிலையில், தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வழியாக பிரதமர் மோடி பேசி உள்ளார். இந்த பேச்சுவார்த்தை குறித்தும், என்ன பேசினோம் என்பது பற்றியும் பிரதமர் மோடி தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலை தள பதிவில் வெளியிட்டு உள்ளார்.
அதில் பிரதமர் மோடி கூறி உள்ளதாவது;
அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அவரின் கருத்துகளை கேட்டறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை நான் தெரிவித்தேன். சாத்தியமான அனைத்து பங்களிப்பு மற்றும் உக்ரைனுடனான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், பிரதமர் மோடியுடன் பேசிய விவரங்கள் என்ன என்பது பற்றி ஜெலன்ஸ்கியும் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது;
இருதரப்பு ஒத்துழைப்பு, ராஜதந்திர செயல்பாடுகள் என அனைத்து முக்கிய விஷயங்கள் குறித்தும் விரிவாக விவாதித்தோம். என் மக்களுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறிய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
ஜாபோரிஸ்சியாவில் உள்ள பஸ் நிலையம் ரஷ்யாவால் நேற்று தாக்கப்பட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. வேண்டும் என்றே ரஷ்யா நடத்திய குண்டுவீச்சில் ஏராளமான மக்கள் காயம் அடைந்தனர். பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வரும் சாத்தியம் இருக்கும் இந்த தருணத்தில் ரஷ்யா தாக்குதல்களை தொடர விரும்புகிறது.
அமைதிக்கான தீர்வை காண்பது என்ற விஷயம் அந்நாட்டின் பங்கேற்புடன் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா பகிர்வதும் முக்கிய ஒன்றாகும். ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியை மட்டுப்படுத்துவது அவசியம் என்பதை பேச்சின் போது நான் குறிப்பிட்டேன்.
ரஷ்யாவுடன் தொடர்புடைய செல்வாக்குமிக்க ஒவ்வொரு தலைவரும், அந்நாட்டுக்கு இதை தெரியப்படுத்துவது அவசியம்.செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் இருவரும் சந்தித்து பரஸ்பரம் பேச ஒப்புக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு அந்த பதிவில் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.