பிரான்சில் பிப்.,11ல் ஏ.ஐ., உச்சி மாநாடு; பங்கேற்கிறார் பிரதமர் மோடி
பிரான்சில் பிப்.,11ல் ஏ.ஐ., உச்சி மாநாடு; பங்கேற்கிறார் பிரதமர் மோடி
UPDATED : பிப் 07, 2025 03:50 PM
ADDED : பிப் 07, 2025 12:18 PM

புதுடில்லி: பிரான்சில் நடக்கும் ஏ.ஐ., மாநாட்டிற்கு அந்நாட்டு அதிபர் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடியும் தலைமை ஏற்க உள்ளார்.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., தொடர்பான மாநாடு கடந்த 2023 ல் பிரிட்டன் தலைநகர் லண்டனிலும், 2024ல் தென் கொரியா தலைநகர் சியோலிலும் நடந்தது. இந்த ஆண்டு வரும் 11ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடக்கிறது.
இந்த மாநாடு ஆனது,
* பொது நலன் சார்ந்த AI
*எதிர்காலங்களில் பணி
*புதுமை மற்றும் கலாச்சாரம்
* ஏ.ஐ., மீதான நம்பிக்கை
*ஏ.ஐ.,ன் உலகளாவிய நிர்வாகம் ஆகிய தலைப்புகளில் இம்மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில், ஏ.ஐ., தொண்டு நிறுவனம் அமைக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாநாட்டில், பிரான்சுடன் இணைந்து தலைமையேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று வரும் 10ம் தேதி பிரதமர் மோடி பிரான்ஸ் செல்ல உள்ளார். அங்கு, மார்சிலி நகரில் மேக்ரானை சந்தித்து விண்வெளி, இன்ஜீன்கள், நீர்மூழ்கி கப்பல்கள், அணுசக்தி உலைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கின்றனர். இரு நாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
இதன் பிறகு ஏ.ஐ., மாநாட்டில் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இம்மாநாட்டில் அமெரிக்கா சார்பில் துணை அதிபர் ஜேடி வான்சும், சீனா துணை பிரதமர் டிங் ஷியுஷியாங்கும் கலந்து கொள்கின்றனர். ஒரு வாரம் நடக்கும் இம்மாநாட்டில் உலகளவில் பல்வேறு நாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், சிஇஓ.,க்கள் பங்கேற்கின்றனர்.
இம்மாநாட்டிற்கு பிறகு 12ம் தேதி பிரான்ஸின் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த சி.இ.ஓ.,க்களை சந்தித்து இந்தியாவில் முதலீடு மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டை அதிகரிப்பது குறித்தும் பிரதமர் விவாதிக்க உள்ளார். இதனை முடித்துக் கொண்டு அமெரிக்கா செல்லும் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ளார்.