உபி.,யில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
உபி.,யில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
UPDATED : செப் 25, 2025 11:52 AM
ADDED : செப் 25, 2025 10:46 AM

நொய்டா: உத்தரபிரதேசத்தில் 5 நாட்கள் நடக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
சர்வதேச வர்த்தகக் கண்காட்சி கவுதம புத்த நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இன்று முதல் செப்., 29ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தக் கண்காட்சியில் 2,400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. இதனை 1.25 லட்சம் வர்த்தகர்களும், 4.50 லட்சம் பொதுமக்களும் பார்வையிட உள்ளனர்.
இந்த கண்காட்சியானது, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான ஒரு மேடையாக மட்டுமல்லாமல், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.
இந்தக் கண்காட்சியில் ரஷ்யா நெருங்கிய உறவு நாடாக பங்கேற்கிறது. நாளை (செப்.,26) இந்தியா-ரஷ்யா வர்த்தக உரையாடல் நடைபெற இருக்கிறது. இந்த உரையாடல் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உத்தரபிரதேச மாநிலத்தில் தொழில்நுட்ப கூட்டு வணிகங்கள், கூட்டு முயற்சிகள் மற்றும் புதிய வணிக வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
இந்த நிலையில், இந்தக் கண்காட்சி பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, கண்காட்சியில் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ள தொழில் முனைவோர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். முன்னதாக, பிரதமருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைவு பரிசை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது; சிப் முதல் கப்பல் வரை அனைத்து பொருட்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் 55 சதவீதம் உத்தரபிரதேசத்தில் தயாரிக்கப்படுகிறது. செமி கன்டக்டர் துறையிலும் இந்தியா வலிமையடைந்து வருகிறது. இங்கிருந்து சில கிலோ தொலைவில் தான் முக்கிய செமி கன்டக்டர் உற்பத்தி ஆலைக்கான கட்டுமானம் நடைபெற்று வருகிறது.ரஷ்யாவுடன் இணைந்து ஏகே 203 ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் ஆலை உத்தரபிரதேசத்தில் நிறுவப்படும்.
இன்றைய உலகில் நிதி தொழில்நுட்பத் துறை மிகக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. அனைவருக்கும் ஏற்ற வகையில் புதுமையான தளங்களை இந்தியா உருவாக்கியுள்ளது. யுபிஐ, ஆதார், டிஜி லாக்கர், மற்றும் ஒஎன்டிசி உள்ளிட்ட தளங்கள் அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன.
உள்ளூர் வியாபாரிகள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை, யுபிஐயைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர். நீங்கள் ஒரு மாலில் ஷாப்பிங் செய்தாலும் சரி, தெருவில் தேயிலை விற்பனை செய்தாலும் சரி, அனைவரும் யுபிஐயைப் பயன்படுத்துகிறார்கள். 2047ம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் இலக்கை அடைய இந்தியம் முன்னேறி வருகிறது.
தங்களின் தோல்விகளை மறைத்து விட்டு, காங்கிரஸூம், அதன் கூட்டணிகளும் மக்களிடையே பொய்யை கூறி வருகின்றனர். இந்திய மக்களின் வருமானம் மற்றும் சேமிப்பை நாங்கள் உயர்த்தியுள்ளோம்.இதோடு நாங்கள் நிறுத்தி விட மாட்டோம். நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம். வரிகளை தொடர்ந்து குறைப்போம். ஜிஎஸ்டி மறுசீரமைப்பு தொடர்ந்து நடக்கும், இவ்வாறு அவர் கூறினார்.