பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்: திட்டமிடும் பணி நடப்பதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்: திட்டமிடும் பணி நடப்பதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்
ADDED : ஜன 31, 2025 07:28 PM

புதுடில்லி: பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் பணி இரு தரப்பிலும் நடப்பதாக வெளியறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாம் முறை பதவியேற்றது முதல் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். உலகின் முன்னணி நாடுகளின் அதிபர்களுடன் போனில் உரையாடியும் வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி, விரைவில் அமெரிக்கா வர இருப்பதாக 2 நாட்களுக்கு முன் டிரம்ப் அறிவித்தார்.
இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
பிரதமரின் அமெரிக்க பயணத்திற்கான தேதிகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் சில நாட்களுக்கு முன் போனில் உரையாடினர்.
அப்போது பிரதமர் மோடியுடன் பயனுள்ள' உரையாடல் நடத்தியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இந்தோ-பசிபிக் குவாட் கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இந்த ஆண்டு இறுதியில் இந்தியா முதல் முறையாக குவாட் மாநாட்டை நடத்துகிறது.
மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனின் நிலைமை உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். உலக அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் முன்கூட்டியே நடப்பதற்கு இரு தரப்பிலும் தீவிர பணி நடந்துவருகிறது.
இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.