இயல்பு நிலை வந்துடுச்சா; எந்த உலகத்தில் இருக்கீங்க; மணிப்பூர் முதல்வருக்கு காங்கிரஸ் கேள்வி
இயல்பு நிலை வந்துடுச்சா; எந்த உலகத்தில் இருக்கீங்க; மணிப்பூர் முதல்வருக்கு காங்கிரஸ் கேள்வி
UPDATED : ஆக 31, 2024 11:26 AM
ADDED : ஆக 31, 2024 11:20 AM

புதுடில்லி: 'மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் எந்த உலகத்தில் வாழ்கிறார் என தெரியவில்லை' என, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி: மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். உலகம் முழுவதும் பிரதமர் சென்றுவிட்டார். கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்து விட்டன. மணிப்பூரில் அமைதி இல்லை. நல்லிணக்கம் இல்லை. இயல்பு நிலை இல்லை. முதல்வர் பைரேன் சிங் எந்த உலகில் வாழ்கிறார் என்று தெரியவில்லை. அவர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் எதன் அடிப்படையில் இயல்பு நிலை நிலவுகிறது என கூறுகிறார் என தெரியவில்லை.
நல்ல வித்தியாசம்
பிரதமர் உக்ரைனுக்குப் போயிருக்கிறார். ரஷ்யாவுக்குப் போயிருக்கிறார். போலந்துக்குப் போயிருக்கிறார். அவர் நாடு முழுவதும் சென்றிருக்கிறார். உலகின் பிற நாடுகளுக்குச் சென்றாலும், மணிப்பூருக்குச் செல்ல சில மணிநேரம் கூட அவருக்கு நேரமோ விருப்பமோ கிடைக்கவில்லை. லோக்சபா தேர்தலில் மணிப்பூரில் பா.ஜ.,வை காங்கிரஸ் வீழ்த்தியது. அவர்கள் நல்ல வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். பிரதமர் மணிப்பூர் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது தான் மிக முக்கியமான தேவை.
நல்லிணக்கம்
மத்திய, மாநில அரசுகள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடனும் பேசி அவர்களை ஒன்றிணைக்க வேண்டும். தற்போதைய முதல்வரால், விஷயங்கள் மேம்படும் என்று நான் நினைக்கவில்லை. பிரதமர் மோடி 16 மாதங்களாக மணிப்பூர் செல்லாதது ஏன்? மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை காங்கிரஸ் விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் மெய்டி மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையேயான இனக்கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.