ADDED : ஆக 22, 2025 12:21 AM

புதுடில்லி, ஆக. 22-
'காங்கிரசில் இருக்கும் இளம் தலைவர்கள் திறமையானவர்கள். ஆனால், பார்லி.,யில் பேச அவர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை' என பிரதமர் மோடி விமர்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், கடந்த மாதம் 21ம் தேதி துவங்கிய நிலையில், நேற்று முடிவடைந்தது.
இந்தக் கூட்டத்தொடரில் பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, ஆப்பரேஷன் சிந்துார் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால், இரு சபைகளிலும் பெரும்பாலும் அமளியே நிலவியது. இதனால், சபை நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளையொட்டி, தே.ஜ., கூட்டணி தலைவர்களுக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்து அளித்தார். அப்போது எதிர்க்கட்சியில் இருக்கும் இளம் தலைவர்களை பிரதமர் மோடி பாராட்டி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில இளம் தலைவர்கள் திறமையானவர்கள், இதனால் தன் பதவிக்கு எங்கே பாதகம் ஏற்பட்டு விடுமோ என ராகுல் அச்சத்தில் இருப்பதாகவும் பிரதமர் மோடி விமர்சி த்ததாக கூறப்படுகிறது.
மழைக்கால கூட்டத்தொடரில் பெரும்பாலான நாட்கள் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன என்றும், இருந்தாலும் முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதில் தனக்கு திருப்தி ஏற்பட்டிருப்பதாகவும் தே.ஜ., கூட்டணி தலைவர்களிடம் அவர் கூறியது தெரிய வந்துள்ளது.
இந்த தேநீர் விருந்தில் கூட்டணி கட்சியினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் யாரும் பங்கேற்கவில்லை.