'டபுள் டெக்கர்' பஸ்கள் வாங்க பி.எம்.டி., புதிய டெண்டர்
'டபுள் டெக்கர்' பஸ்கள் வாங்க பி.எம்.டி., புதிய டெண்டர்
ADDED : பிப் 02, 2024 11:21 PM

பெங்களூரு: 'டபுள் டெக்கர்' பஸ்களை வாங்க, அழைக்கப்பட்ட டெண்டரில் பங்கேற்க நிறுவனங்கள் ஆர்வம் காண்பிக்காததால், புதிதாக டெண்டர் அழைக்க பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன், பெங்களூரில் டபுள் டெக்கர் பஸ்கள் இயக்கப்பட்டன. தவிர்க்க முடியாத காரணங்களால், 1990க்கு பின் கட்டம், கட்டமாக இந்த பஸ்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இன்றைய தலைமுறையினருக்கு, மீண்டும் டபுள் டெக்கர் பஸ்களை அறிமுகம் செய்யும் நோக்கில், மாநில அரசிடம் பி.எம்.டி.சி., வேண்டுகோள் விடுத்தது.
இதை ஏற்ற அரசும், 10 பஸ்களை வாங்க ஆறு மாதங்களுக்கு முன், அனுமதி அளித்தது. பஸ்களை வாங்க பி.எம்.டி.சி., டெண்டர் அழைத்தது. ஆனால், ஒப்பந்ததாரர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
ஒரு நிறுவனம் மட்டும், டெண்டரில் பங்கேற்றது. விதிமுறைப்படி ஒன்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்க வேண்டும். எனவே புதிதாக டெண்டர் அழைக்க, அரசிடம் அனுமதி கோரிக்கை விடுத்தது.
இரண்டு வாரங்களில் டெண்டர் அழைக்கப்படும். இதில் டாடா, அசோக் லேலண்ட் உட்பட மற்ற நிறுவனங்கள் பங்கேற்கும் வாய்ப்புள்ளது.
தேசிய துாய்மை காற்று திட்டத்தின் கீழ், ஐந்து டபுள் டெக்கர் பஸ்கள் இயக்கப்படும். சுற்றுலா பயணியரை ஈர்ப்பதே, இப்பஸ்களின் நோக்கம். எனவே சுற்றுலா தலங்கள் உள்ள பாதைகளில், இந்த பஸ்கள் இயக்கப்படும்.
இதற்கு முன் டீசல் பயன்படுத்தி, டபுள் டெக்கர் பஸ்கள் இயக்கப்பட்டது.
தற்போது இயக்கப்படும் பஸ்கள், மின்சார பஸ்களாக இருக்கும். பெங்களூரில் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

