மெட்ரோ ரயில் நிலையங்களில் கடைகள் அமைக்கிறது பி.எம்.ஆர்.சி.எல்.,
மெட்ரோ ரயில் நிலையங்களில் கடைகள் அமைக்கிறது பி.எம்.ஆர்.சி.எல்.,
ADDED : அக் 31, 2024 12:12 AM
பெங்களூரு : மெட்ரோ ரயில் நிலையங்களில் கடைகள், காபி ஷாப்கள் அமைக்க டெண்டர் கோர, பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் ஒயிட்பீல்டு- - செல்லகட்டா; நாகசந்திரா- - சில்க் இன்ஸ்டிடியூட் இடையில் தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியர் டிக்கெட் எடுக்கும் வருமானத்தைத் தவிர, வேறு எந்த வழியிலும் பி.எம்.ஆர்.சி.எல்.,லுக்கு வருமானம் கிடைப்பதில்லை.
வருவாயைப் பெருக்க பி.எம்.ஆர்.சி.எல்., அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நகரில் உள்ள 55 மெட்ரோ ரயில் நிலையங்களில் சில்லறை பொருட்கள் விற்பனை கடை, காபி ஷாப்கள் அமைக்க பி.எம்.ஆர்.சி.எல்., திட்டமிட்டுள்ளது. இதற்காகடெண்டர் அழைக்கவும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில் நிலையங்களில் காலியாக இருக்கும் இடங்களை, கடை வைக்க ஏலம் விடுவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது பயணியருக்கு அனுகூலமாக இருப்பதுடன், எங்களுக்கும் வருவாயை மேம்படுத்த உதவும்.
புகையிலை, குட்கா உள்ளிட்ட உடலுக்கு தீங்கான பொருட்களை விற்பனை செய்யும், கடைகளை வைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கூறினார்.