பொங்கல் விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களுக்கு அளிக்கும் மரியாதை: எல்.முருகன் பேட்டி
பொங்கல் விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களுக்கு அளிக்கும் மரியாதை: எல்.முருகன் பேட்டி
UPDATED : ஜன 13, 2026 08:03 PM
ADDED : ஜன 13, 2026 07:25 PM

புதுடில்லி: டில்லியில் நாளை (ஜனவரி 14) நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி நேரில் வந்து பங்கேற்பது தமிழர்களுக்கு அவர் அளிக்கும் மரியாதை என மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
டில்லியில் நாளை (ஜனவரி 14) தனது இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ள நிலையில், மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தமிழர்கள் மீது, தமிழர்களின் வாழ்வு முறை மீது, பண்பாடு, கலாசாரம் மற்றும் தமிழ் மொழியின் மீது அதிகமான பிரியத்தை வைத்துள்ளார். அதனால் தான் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நான்காவது முறையாக நடந்து இருக்கிறது.
திருக்குறளை மட்டும் 35 மொழிகளில் மொழி பெயர்த்து இருக்கிறார். அதேபோல் திருவள்ளுவருக்கு உலகம் முழுவதும் கலாசாரம் மையம் அமைக்கப்படுகிறது. வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தையும் நாம் கொண்டாட இருக்கிறோம்.
பிரதமர் மோடி வந்து நம்முடன் இருந்து பொங்கல் நிகழ்ச்சியில் வழிபட இருக்கிறார். தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. டில்லியில் இருக்கும் தமிழர்கள் உடன் பிரதமர் மோடி வந்து பொங்கல் விழா கொண்டாடுவது கவுரவத்தையும், தமிழர்களுக்கு மிகப்பெரிய மரியாதையையும் ஏற்படுத்தும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

