மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கையும் எளிதாக எட்ட முடியும் 'நிடி ஆயோக்' கூட்டத்தில் பிரதமர் பேச்சு
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கையும் எளிதாக எட்ட முடியும் 'நிடி ஆயோக்' கூட்டத்தில் பிரதமர் பேச்சு
ADDED : மே 25, 2025 01:32 AM

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்த ஒரு இலக்கையும் எளிதாக எட்ட முடியும்,'' என 'நிடி ஆயோக்' கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
டில்லி பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் 'நிடி ஆயோக்' ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கைக்கு பின், பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்களும் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:
'வரும் 2047-ல் வளர்ந்த இந்தியா' என்பதே ஒவ்வொரு இந்தியரின் குறிக்கோள். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சியடைந்தால், இந்தியா வளர்ச்சியடையும். இதுவே, 140 கோடி இந்தியர்களின் விருப்பம். ஒவ்வொரு மாநகரத்தையும், நகரத்தையும், கிராமத்தையும் வளர்ச்சியடைய செய்வதை, நாம் இலக்காக கொண்டால், 2047 வரை காத்திருக்க வேண்டியதில்லை.
நம் வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்துவது அவசியம். மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றினால், எந்தவொரு இலக்கையும் எளிதாக எட்ட முடியும்.
ஒவ்வொரு மாநிலமும், குறைந்த பட்சம் ஒரு சுற்றுலா தலத்தையாவது, உலக தரத்துக்கு இணையாக, அனைத்து விதமான வசதிகள், உள்கட்டமைப்புடன் உருவாக்க வேண்டும். அது, அருகில் உள்ள நகரங்களையும் சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கு வழி வகுக்கும்.
நம் நாடு, வேகமாக நகரமயமாகி வரும் சூழலில், எதிர்காலத்துக்கு தயாராகும் வகையில் நகரங்களை மேம்படுத்துவது அவசியம். வளர்ச்சி, புதுமை, நிலைப்புத்தன்மை ஆகியவை நகர மேம்பாட்டுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.
மேலும், பணிகளில் பெண்களை பங்குபெறச் செய்யும் வகையில் செயல்பட வேண்டும். அவர்களை கண்ணியத்துடன் ஒருங்கிணைக்கும் வகையில் சட்டங்கள், கொள்கைகளை வகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
'௶தமிழக நதிகளை மீட்க திட்டம்மத்திய அரசு தயாரிக்க வேண்டும்'
''கங்கை நதியை மேம்படுத்தி மீட்டெடுத்ததை போலவே, தமிழத்தின் காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான நதிகளையும் சுத்தம் செய்து, மீட்டெடுக்க புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இந்த திட்டங்களுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும்,'' என, நிடி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நிடி ஆயோக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
வரும் 2030க்குள், 85 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதே தமிழகத்தின் இலக்கு. அதை நோக்கி செயலாற்றி வருவதால் தான், அதன் பயன்கள் புள்ளி விபரங்களிலும், வளர்ச்சி குறியீடுகளிலும் எதிரொலிக்கின்றன.
சமீப காலங்களில் ஆண்டுதோறும் 8 சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சி காணப்படுகிறது. கடந்த ஆண்டு தேசிய அளவில் அதிகபட்சமாக 9.69 சதவீத வளர்ச்சி இருந்தது. இதன் தொடர்ச்சியாக, 2047ல், 380 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்கோடு தமிழக அரசு செயலாற்றி வருகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில், நிச்சயம் தமிழகத்தின் பங்கு அதிகமாக இருக்கும். தமிழகம் முழுமையாக தொழில் மயமாகியுள்ளது. ஆட்டோமொபைல் முதல், பசுமை ஹைட்ரஜன் வரை அனைத்து துறைகளிலும் வலுவான வளர்ச்சி காணப்படுகிறது. இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில், 41 சதவீதம் பேர் தமிழகத்தில்தான் உள்ளனர்.
புதிய திட்டங்களால் தான் நகரமயமாக்கலில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெரும் அளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம்.
சிறந்த உள்கட்டமைப்பு இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாக கொண்ட, ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்தை உருவாக்குவது அவசர தேவையாகும். கங்கை நதியை மேம்படுத்தி மீட்டெடுத்ததைப்போலவே தமிழகத்தில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான நிதிகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்க திட்டம் தேவை.
இதற்கென புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இந்த திட்டங்களுக்கெல்லாம், அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் தான் பெயரிட வேண்டும்.
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கும், பிரதமரின் தொலைநோக்கு திட்டத்துக்கும் பாராட்டுக்கள். தமிழகம் போன்ற மாநிலங்கள், தங்கள் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு மத்திய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும்.
பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், கல்வி நிதி மறுக்கப்படுகிறது. 2024 - 25ல், 2,200 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதி தமிழகத்துக்கு மறுக்கப்பட்டுள்ளது; இது, தமிழக மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. எனவே, இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.
மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை பெற எப்போதும் போராட வேண்டியுள்ளது. இது, கூட்டாட்சி தத்துவத்துக்கு அழகல்ல. இது, மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும்; இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும். 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க கூடிய வரி வருவாயை 41 சதவீதமாக உயர்த்தினர்.
ஆனாலும், இந்த பரிந்துரைக்கு மாறாக, கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசின் மொத்த வரி வருவாயில், 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து தரப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய வரிப் பகிர்வு குறைவதால், மாநில அரசுகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதியாலும், மாநிலங்கள் பெரும் சுமையை சுமக்கின்றன. எனவே, மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு பங்கை, 50 சதவீதம் உயர்த்துவது தான் முறை.
இவ்வாறு அவர் பேசினார்.
-நமது டில்லி நிருபர்-